திருப்பதி லட்டுக்கு இனி தட்டுப்பாடு இருக்காது ..... !


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடைக்காலத்தை ஒட்டி தினமும் 6 லட்சம் லட்டுகளை தயாரித்து இருப்பு வைத்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட இருக்கிறது.
கோடைக்கால விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, கூடுதலாக லட்டு பிரசாதத்தை தயாரித்து இருப்பு வைத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். லட்டு தயாரிக்கும் கூடத்தில் தற்போது 550 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 310 பேர் லட்டு உருண்டை பிடிக்கிறார்கள். மற்றவர்கள் பூந்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு ஊழியர் தினமும் சாதாரண நாட்களில் 5 ஆயிரம் லட்டுகளும், கூட்ட நாளில் 5 ஆயிரத்து 500 லட்டுகளும் தயாரிக்க வேண்டும். கோவிலில் சாதாரண நாட்களில் மொத்தமாக தினமும் 3 லட்சம் லட்டுகளும், கூட்ட நாட்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் லட்டுகளும் தயாரித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது தினமும் சிபாரிசு இல்லாமல் 50 ஆயிரம் கூடுதல் லட்டுகள் பக்தர்களுக்கு ரூ.25 வீதம் விற்பனை செய்யப்படுகிறது.
கோடைக்காலத்தையொட்டி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தினமும் 6 லட்சம் லட்டுகளை தயாரித்து இருப்பு வைத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்காக பூந்தி தயாரிக்கும் இடத்தை சற்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பூந்தி தயாரிக்கும் கூடத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யும் பணிக்காக ஊழியர்களுக்கு எந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.
பூந்தி தயாரிக்கும் கூடத்தில் வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க ரூ.6 லட்சம் செலவில் ஜன்னல்கள் அமைத்து, கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.



Leave a Comment