திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராமநவமி சிறப்பு திருமஞ்சனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராமநவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் கோயில் ஜீயர்கள் மற்றும் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீராம நவமியையொட்டி நேற்று காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு அர்ச்சனை, தோமாலை நடைபெற்றது. பின்னர், ரங்கநாத மண்டபத்தில் சீதா லட்சுமண சமேத கோதண்டராமர் மற்றும் அனுமந்த ஆழ்வாருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் ஜீயர்கள் முன்னிலையில் பிரதான அர்ச்சகர் ரமணதீட்சிதலு அபிஷேகம் செய்தார். பின்னர், துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், துணை செயல் அலுவலர் அரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு ராமரின் தீவிர பக்தரான அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.



Leave a Comment