குடந்தை மகாமககுளம் தோன்றிய வரலாறு ....


ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவன், கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை காணச்சென்றார். அவரிடம் உலகத்தை அழிக்கக்கூடிய பிரளய காலம் எனும் ஊழி வெள்ளம் வர உள்ளது. (ஊழி வெள்ளம் என்பது உலகத்தையே அழிக்கக்கூடிய சுனாமி போன்றது). பிரளய காலத்தில் வேதம் முதலிய பொருட்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், சிருஷ்டி பீஜம்(படைப்பதற்கு உரிய மூலப்பொருள்) அழிந்து விட்டால் எப்படி நான் எனது படைப்பு தொழிலை மேற்கொள்ள முடியும் என சிவபெருமானிடம் கவலையுடன் பிரம்மதேவன் முறையிட்டு அதற்கு தாங்கள்தான் ஒரு உபாயம் தெரிவிக்கவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார்.
அதற்கு சிவபெருமான் அமுதத்தையும், மண்ணையும் சேர்த்து பிசைந்து மாயமாகிய குடத்தை செய்து அதனுள் அமுதத்தை நிரப்பி, அதனுள் தான் அளிக்கும் விதையாகிய சிருஷ்டி பீஜத்தை வைத்து, வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களை அதன் நான்கு புறமும் வைத்து,அதில் அதிகமான அமுதத்தை சேர்த்து, குடத்தின் மேல் மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல், தர்ப்பை முதலியவற்றை சேர்த்து அத்துடன் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி அதற்கு சிறப்பு பூஜை செய்து அக்குடத்தை ஒரு உறியில் வைத்து மகாமேருமலையில் ஓர் இடத்தில் வைக்க கூறினார். ஊழி வெள்ளம் ஏற்படும்போது அதற்கு வேண்டியதை யாம் செய்திடுவோம் என சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரளய வெள்ளமும் ஏற்பட்டது. மகாமேரு மலையில் வைக்கப்பட்ட சிருஷ்டி பீஜம் அடங்கிய குடம் மிதந்து தென்திசை நோக்கி செல்லும். அப்போது அந்த இடத்தில் நான் தோன்றி வேண்டுவதை நிறைவேற்றுவோம் எனக்கூறி பிரம்மதேவனை அனுப்பி வைத்தார்.
சிவபெருமான் கூறியபடியே பிரம்மதேவனும் மகாமேருமலையில் சிருஷ்டிபீஜம், அமுதம் அடங்கிய மாயமாகிய குடத்தை வைத்து சிவபெருமானின் திருவருளை எதிர்நோக்கி காத்திருந்தார். இதையடுத்து சில நாட்களில் உலகத்தை அழிக்க பிரளயம் உருவாகி ஏழு கடல்கள் யாவும் ஒன்றாய் கலந்து உலகை மூழ்கடித்தது. பெருவெள்ளம், மழை, காற்று ஆகியவற்றால் அனைத்து ஜீவராசிகள், மலைகள் முதலான அனைத்தும் மூழ்கி உலகமே அழிந்தது. அப்போது சிவபெருமான் அருளியபடி தென்திசை நோக்கி அமுதம் நிரம்பிய குடம்(கலசம்) சுழன்று, சுழன்று மிதந்து வந்து திருக்கலயநல்லூர் எனும் இடத்தில் வந்தது. அப்போது அதன் மேல் இருந்த மாவிலை,தர்ப்பை திருக்கலசநல்லூர் தலத்தில் விழுந்து சிவலிங்கமாகின. மீண்டும் வடமேற்கு திசையில் சென்று ஓர் இடத்தில் அந்த குடம் தங்கியவுடன் ஊழி வெள்ளம் வடிந்தது. பிரம்மனும்,தேவர்களும் அதனைப்பின்தொடர்ந்து வந்தனர். அப்போது சிவபெருமான் கிராதமூர்த்தியாக எழுந்தருளி சற்று தொலைவிலிருந்து அம்பு எய்து அந்த அமிர்த குடத்தை உடைத்தார்.
அப்போது மாயகுடம் இரண்டாக உடைந்தது. இந்த நிகழ்வு நடந்த இடம் கும்பகோணம். அந்த இடத்தில் தான் தற்போது கும்பேஸ்வரர் கோயில் அமைய பெற்றுள்ளது. சிவன் உடைத்த குடத்தில் வைக்கப்பட்டிருந்த அமிர்தம் ஆறாய்ப் பெருகி எட்டு திக்குகளிலும் பெருகிச்சென்றது. அதே போல் தேங்காய், வில்வம், உறி உள்ளிட்ட அனைத்தும் சிதறி விழுந்தன. இந்த கோயில்களில் உள்ள சுவாமிகள் புண்ணிய குளமான மகாமககுளத்திற்கு மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பவுர்ணமி நாளும், மக நட்சத்திர நாளும் இணைந்து வரும் நாளில் மாசி மக விழா கொண்டாப்படுகிறது. இதுவே சிம்ம ராசியில் குருபகவான் வந்தால் மகா மக விழாவாக கொண்டாடப்படும். வழக்கமாக இது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அன்று தான் குளத்தில் உள்ள 20 தீர்த்த கிணறுகளிலும் அந்த தெய்வங்கள் வந்து புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.



Leave a Comment