கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழா... டிசம்பர் 2 கார்த்திகை தீபம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கோயில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தபடியே தங்கக் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள 73 அடி உயர தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான நவம்பர் 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. விழாவின் 10-ஆம் நாளான டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையில் மகா தீபமும் ஏற்றப்படும்.



Leave a Comment