ரம்பா திருதியைப் பற்றி தெரியுமா?


 

 

அட்சயத் திருதியை  பற்றி அனைவருக்கும் தெரியும்.அந்த நாளில் சிறிய அளவிலாவது செல்வம் வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொள்வார்கள். அதன்  முலம் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

 அட்சயத் திருதியை பற்றி தெரியும். ரம்பா திருதியைப் பற்றி தெரியுமா?

செல்வத்தை அள்ளி தருவது அட்சயத் திருதியை என்றால் ஐஸ்வரியத்தோடு பேரழகை அள்ளித் தரும் விரதம் ரம்பா திருதியை ஆகும். இந்த விரதம் தேவலோக நடன  மங்கையின் ரம்பையின் நினைவாக, பார்வதிதேவியை நினைத்து செய்யப்படும் சிறப்பு மிகுந்த வழிபாடாகும். இந்த நாளில் தான் தேவேந்திரனின் அறிவுரையின் பேரில், பார்வதி தேவியை வழிபட்டு, ரம்பை தன்னுடைய பேரழகை மீட்டெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை அமாவாசைக்கு அடுத்த முன்றாவது நாளில் “ரம்பா திருதியை” விரதம் கடைப்பிடிக்கபடுகிறது.

 ஒருமுறை தேவசபையில் ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களுக்கிடையே நடந்த நடனப் போட்டியின்போது, தேவலோக பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள எண்ணிய ரம்பை, அரங்கமே அதிரும்படி ஆக்ரோஷமாக ஆடினாள். அப்போது அவள் அணிந்திருந்த நெற்றிப் பொட்டும் பிறைச் சந்திரனும் கீழே விழ, நிலைகுலைந்த அவள், கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும் மேனகையும் ரம்பையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர்.

தங்களது ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள். நடந்ததை எல்லாம் தேவர் பெருமக்கள் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்க... 'இன்றைய சகுனம் சரியில்லை; சபை கலையலாம்' என்று உத்தரவிட்டு எழுந்தான் இந்திரன். அன்று இரவு, ரம்பைக்குத் தூக்கம் வர மறுத்தது. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்தினாள்.

மறுநாள் முதல் வேலையாக, தூக்கம் தொலைத்த கண்களுடன் இந்திரனைச் சந்தித்தாள். 'நேற்று அவையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பிராயச்சித்தம் வேண்டும். நடந்த சம்பவத்தால் 'முதல் அழகி' என்ற அந்தஸ்து என்னை விட்டுப் போய்விட்டதோ என்று அச்சம் கொள்கிறேன்' என்று கண்ணீர் பெருக பேசினாள் ரம்பை. ரம்பையை முறைத்துப் பார்த்த இந்திரன், ' உன்னுடைய ஆட்டம்தான் பேயாட்டமாகி அரங்கையே அதிரவைத்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கலைகளின் அரசி கலைவாணி, அதைக் காணச் சகிக்காமல்தான் உனது பிறைச் சந்திரனைக் கழற்றியதோடு, நெற்றிப் பொட்டையும் அகற்றி விட்டாள். அதனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உன்னுடைய அழகிப் பட்டமும் நர்த்தன முறையும் அரங்குக்கு வராமலேயே இருக்கட்டுமே..!' என்று ஆவேசப்பட்டுப் பேசினான்.

  

'தேவேந்திரா! பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும், கௌரவத்துக்கும் தேவருலகில் அதிபதியான நீங்களே என்னை விலகி இரு என்று சொல்லலாமா? இதற்குச் சரியான வழியை- பிராயச்சித்தத்தை எனக்கு இப்போதே சொல்லி, எனது துயரத்தைப் போக்கிட வேண்டும்'' என்று மன்றாடினாள் ரம்பை. அழுது புலம்பும் ரம்பைக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய தேவேந்திரன், 'பூலோகத்தில், தன் பதியைத் தேடிச்சென்ற பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள். அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள். அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள களங்கமும் தீரும்' என்றான். அதன்படி, பூலோகம் வந்த ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது.

கார்த்திகை மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, மறுநாள் சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, பொன்மேனியளாகக் காட்சி தந்தார். ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர ஆசி கூறினார்.

  

மேலும் அவள் மேற்கொண்ட இந்த விரதத்தை அவளது பெயரால் "ரம்பா திருதியை' என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் அதிகரிக்குமென்றும் அருளினாள். ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. எனவே நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் பிரதிமை அல்லது படம் வைத்து நன்கு அலங்கரித்து, பூஜை செய்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, நிறைய வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் நிவேதனம் செய்து, பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் அவற்றை தானம் செய்து பூஜையை நிறைவு செய்வர். பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் அனுஷ்டிக்கலாம்.

இந்த பூஜையினால் நல்ல துணை, நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு முதலியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம். திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.



Leave a Comment