மஞ்சளாக கொட்டிய அருவி நீரில் செண்பகாதேவி அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி...


மஞ்சளாக கொட்டிய அருவி நீரில் செண்பகாதேவி அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிக்குள் உள்ளது செண்பகாதேவி நீர்வீழ்ச்சி.

இந்த நீர்வீழ்ச்சியின் அருகே செண்பகாதேவி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இயற்கை அழகு நிறைந்த அடர்வன பகுதியில் உள்ள இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான திருவிழாவானது கடந்த 13-ஆம் தேதி மலைப்பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் வைத்து கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 10- திருநாளான நேற்று சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று செண்பகாதேவி அம்மனுக்கு அடர்வனப் பகுதியில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்திய நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி வனத்துறையினரின் பாதுகாப்புடன் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

முன்னதாக, செண்பகாதேவி அம்மனுக்கு அருவிக்கரையில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், அருவியில் மஞ்சள் நிறமாக விழுந்த தண்ணீரில் செண்பகாதேவி அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மஞ்சள் நிறமாக மாறிய செண்பகா தேவி அருவியை பரவசத்துடன் கண்டுகளித்து அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment