சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்!  


 

 

சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.

தரிசன வழிபாட்டுக்கே இத்தகைய மகத்துவம் இருக்கும் போது, ஏழேழு உலகங்களையும் ஆட்சி செய்யும் பாபாவிடம் நேரில் பேசி, பழகி, பணிவிடைகள் செய்து, அருள் பெற்றவர்கள் எந்த அளவுக்கு பாக்கியம் செய்தவர்களாக இருந்திருப்பார்கள்? துவாரகமாயி மசூதியில் இருந்து பாபா, இந்த உலகை ஆட்சி செய்த போது, ஏழைகள் பணக்காரர்கள் வித்தியாசமின்றி பலரும் பாபாவிடம் சரண் அடைந்து தங்களை ஒப்படைத்திருந்தனர். பாபாவிடம் உண்மையான பக்தியுடன் இருந்தனர்.

அவர்களில் லட்சுமிபாயும் ஒருவர். இவர் நல்ல வசதி படைத்தவர். பாபாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் இரவில் மசூதியில் தூங்குவதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். மசூதியில் பாபாவுக்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும் சேவையை லட்சுமிபாய் செய்து வந்தார். ஒரு தடவை லட்சுமிபாய் சமைத்து எடுத்து வந்திருந்த உணவை, ஒரு நாய்க்கு எடுத்து பாபா போட்டார்.

அதைக் கண்டு வேதனை அடைந்த லட்சுமிபாய், ‘‘என்ன பாபா இப்படி செய்து விட்டீர்கள்?’’ என்றார். அதற்கு பாபா, ‘‘என் பசியைப் போன்றதுதான் நாயின் பசியும். எந்த ஒரு உயிரினத்தின் பசியைத் தீர்த்து வைத்தாலும், அது என் பசியைத் தீர்த்து வைத்த மாதிரியாகும். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

 



பாபா மகாசமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு லட்சுமி பாயை அழைத்தார். தன் கப்னி உடைக்குள் கையை விட்டு 2 தடவை நாணயங்களை எடுத்துக் கொடுத்தார். ஒரு தடவை ஐந்து நாணயங்கள் வந்தது. அடுத்த முறை 4 நாணயங்கள் வந்தது. அந்த 9 நாணயங்களையும் அவர் லட்சுமிபாயிடம் கொடுத்தார்.

பாபாவின் இந்த செய்கை ஒன்பதின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இதனால் அந்த 9 நாணயங்களையும் அவர் பொக்கி‌ஷமாகக் கருதினார். சீரடியில் உள்ள லட்சுமிபாயின் வீட்டில் அந்த 9 நாணயங்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகிறார்கள். சீரடி செல்லும் பக்தர்களில் பலரும் லட்சுமிபாய் வீட்டுக்கு சென்று அந்த நாணயங்களை பார்த்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

லட்சுமிபாய் போல இன்னொரு பக்தரான ஷாமாவுக்கும் ஒரு தடவை சாய்பாபா, மிகவும் அபூர்வமான செப்பு நாணயம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அது சாதாரண நாணயமல்ல. நாணயத்தின் ஒரு பக்கம் ராமர், சீதை, லட்சுமணர் உருவங்கள் உள்ளது. மற்றொரு பக்கத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது.

தான் உடுத்திருந்த கப்னி உடை மட்டுமே தனக்குரியதாகக் கொண்டு வாழ்ந்த பாபா, தினமும் தனக்கு கிடைக்கும் நாணயங்கள், பொருட்களை அன்றே பக்தர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவார். ஆனால் அந்த அபூர்வ செப்பு நாணயத்தை மட்டும் அவர் யாருக்கும் கொடுக்காமல் நீண்ட நாட்களாக தம்முடனே வைத்திருந்தார்.
அதை பெறும் பாக்கியம் ஷாமாவுக்கு கிடைத்தது.



Leave a Comment