அச்சன்கோவில் ஆராட்டு மஹோற்சவ விழாவுக்கு சென்ற திருவாபரண பெட்டி... தென்காசி மக்கள் தரிசனம்...


செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கேரள மாநிலத்தில் அச்சன்கோவிலில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிரம்மோஸ்தவ விழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவிற்காக புனலூர் கருவூலத்திலிருந்து கேரள தமிழ்நாடு இரு மாநில போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணங்கள் அடங்கிய ஆபரணப்பெட்டி ஊர்வலமாக தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் முன்பு கொண்டுவரப்பட்டது.  

அங்கு திருஆபரணப்பெட்டிக்கு மேள தாள தாரை தப்பட்டைகள் வெடிகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த ஊர்வலமானது கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . திருஆபரண பெட்டிக்குள் ஸ்ரீ ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள் மற்றும் கால்கள் கவசம் மற்றும் 18 இஞ்ச் நீளம் உடைய தங்க வாளும் உள்ளது. இதனால் அந்த ஐயப்பனே வருவது போல ஐதீகம் . இந்நிகழ்ச்சியில் தென்காசி  சுற்று வட்டார மற்றும் தமிழக கேரளத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்திருந்து திருஆபரண பெட்டியை வழிபட்டனா்.



Leave a Comment