ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது!


திருச்சி: ஸ்ரீ ரங்கத்தில்  இருக்கும் ஸ்ரீ ரெங்காநாதர்  கோவிலுக்கு  பாரம்பரியத்துக்கான 'யுனெஸ்கோ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பரிய கட்டடங்களை மீட்டெடுக்க மற்றும் பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஆண்டுதோறும், யுனெஸ்கோ போட்டிகளை நடத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட பாரம்பரிய விருது போட்டிக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஈரான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளிலிருந்து 43 பாரம்பரிய கட்டடங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

காவிரிக்கரைக்கும் கொள்ளிடக் கரைக்கும் நடுவே அமைந்து உள்ள அற்புதமான வைஷ்ணவத் தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவ திவ்விய தேசங்களில், முதன்மையானதாக கருதப்படுகிறது. அத்துடன் பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்றதும் இக்கோவில் தான். சுற்றுலா தலமாக திகழ்கிறது. 7 பிரகாரங்கள்,21 கோபுரங்கள், 54 சன்னதிகள் கொண்ட பிரமாண்டமான கோவில் பல ஏக்கர் பரப்புகளில் அமைந்துள்ளது. இந்த பெரிய  கோவிலில் முழு அளவில் திருப்பணிகள் செய்து கடந்த வருடத்தில் இரண்டு கட்டமாக மகா கும்பாபிஷேகம் நடந்தது.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வழிபாட்டில் உள்ள பழமை மாறாமல் நடக்கும் திருப்பணிகள் குறித்து,கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பு சார்பில் 9 வல்லுனர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இக்குழு தனது ஆய்வறிக்கை முடிவு குறித்த அறிவிப்பை புதன் கிழமை வெளியிட்டது. இக்கோவிலில்  பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தி,புராதன சிறப்பை பாதுகாத்தமைக்கு சிறப்பு விருது (யுனெஸ்கோ) வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபடுகிறது.

யுனெஸ்கோ விருது அறிவிக்கபட்ட தகவல் அறிந்த ஸ்ரீ ரங்கம் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்  கோவில் வாசலில் பட்டாசு வெடித்தும்,இனிப்பு வழங்கியும்  கொண்டாடினார்.

 

 



Leave a Comment