கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைக்கப்படுவது ஏன்?


கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி தினத்தில் கண்ணனுக்கு படைப்பதற்கு நாம் முறுக்கு, சீடை, வெண்ணெய் என்று நிவேதனம் செய்வோம். கண்ணனுக்கு ஏன் வெண்ணைய் நிவேதனம் செய்யப்படுகிறது தெரியுமா? மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று நினைத்து அதனை நிவேதனமாக செய்கின்றனர். உண்மை என்னவென்றால் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். இந்த வரியை கட்ட முடியாமல் தவித்த மக்கள் தங்கள் வீட்டில் உள்ள நெய், வெண்ணெய் விற்று வரி கட்டினார்கள்.

கம்சனை கண்ணன் கொன்ற பிறகு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் அவர்களிடம் இருந்த வெண்ணெய் அனைத்தையும் கண்ணனுக்கு பரிசாக அளித்தனர். கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. கண்ணன் ராஜா வீட்டுப் பிள்ளை என்பதால் அவரது தாயார் தினமும் கண்ணனுக்கு வெண்ணெய் ஊட்டி ஊட்டி வளர்த்தார். அதனால் வெண்ணையின் ருசி மிகவும் பிடித்துப்போக தன் வீடு மட்டுமல்லாமல் பலர் வீடுகளில் இருக்கும் வெண்ணெயை திருடி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உண்டான் கண்ணன்.

சில சமயங்களில் உரிய அடித்தும், பானையை உடைத்து தயிர் வெண்ணெய் என எதையும் விட்டு வைக்காமல் உண்டார். இருந்தாலும் கண்ணனின் அழகில் மயங்கிய கோகுல வாசிகள் அவரை அடிக்க மனமில்லாமல், திட்டவும் மனமில்லாமல் தவிர்த்தனர். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து கோகுலாஷ்டமி அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது பல மாநிலங்களில் வழக்கமாக உள்ளது. இதனால்தான் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணையை வைத்து வழிபாடு செய்கின்றனர்.



Leave a Comment