துளசி தேவிக்கு திருமணம்!


 

துளசி தேவிக்கு திருமணம் (01-11-2017)

ஸ்ரீ துளசி தேவிக்கும் ஸ்ரீமான் நாராயணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்) கல்யாணம் நடந்ததே, அதற்கு பத்திரிகை கிடைக்காததால் வராதவர்களுக்கும், ‘கல்யாணமா, எப்போ, தெரியாதே’ என்பவர்களுக்கும்,’ கல்யாணம் நடந்தது தெரியுமே, ஆனால் மறந்து போனதே’ என்பவர்களுக்கும், அந்த திருமணத்தைப் பற்றியும் மணமகள் துளசி தேவியைப் பற்றியும் ஞாபகப் படுத்தவே இந்த கட்டுரை. 
கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று
எத்தனையோ காலத்திற்கு முன்பு நடந்தது அந்த தெய்வீக திருமணம்.

தீபாவளிக்கு பிறகு ஒரு 15 நாள் துளசி பூஜை (துளசி ஹப்பா )என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று துளசிக்கட்டை தான் மணமகள். நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள்.

கல்யாணத்திற்கு முன்பே முதல் நாள் சாயங்காலம் இப்போதெல்லாம் அநேகர் மணமக்களை வாழ்த்தி வரவேற்பு அளிக்கிறார்களே. அது போல கல்யாணத்திற்கு முதல் நாள் விஷ்ணுவும், துளசி என்கிற லக்ஷ்மியும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருப்பார்கள். லக்ஷ்மியை துளசியாகவும், கிருஷ்ணனை விஷ்ணுவாகவும் திருமண மக்களாக பாவிப்பது ஐதிகம். அன்று விஷ்ணு கிருஷ்ணன் ஆகியோரின் சக்தி ஜலத்திலும் அக்னியிலும் இருப்பதாக நம்பிக்கை.

துளசி விவாகத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

 1.துளசி மாடத்தை அலங்கரிப்பது.
 2. நாலு பக்கம் கொம்பு நட்டு, துணியில் விதானம் அமைத்து மண்டபமாக செய்வது. விளக்கேற்றுவது,
 3. துளசி செடிக்கு பட்டுத்துணியில் புடவை.துளசி மணி வளையல். குங்கும தாரணம்.
 4. சின்ன பிள்ளையார் விக்ரஹம், சாளிக்ராமங்கள், அருகே வைத்து பூஜை.
 5. துளசி மந்திரம் ஜபித்தல் ” ஓம் துளஸ்யை நம: 108 தடவை. குங்குமார்ச்சனை.’
 6. தூப தீப ஆராதனை. தேங்காய் உடைத்தல்..
 7. துளசி செடியை, மாடத்தை, 7 முறை வலம் வருதல்- பரிகாரம்.
 8.துளசிக்கும், சாளகிராமங்களுக்கும் ஆர்த்தி. மங்கள கீதம் பாடுவது.
விவாகம் முடிந்துவிட்டதே.
விஷ்ணு பூஜை துளசி இல்லாவிட்டால் வீண். எந்த நைவேத்யமும் துளசி தளம், ஜலம் ப்ரோக்ஷணம் இன்றி பூர்த்தியாகாது. துளசி சர்வ பாவங்கள், ஏன் வியாதிகளையும் போக்கக்கூடிய அரு மருந்து. துளசியின் வேரிலிருந்து கிளை, இலை,அனைத்திலும் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள்.

தேவாசுரர்கள் பாற் கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாலகிராமமாக இருக்கும்போதெல்லாம் துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.

விஷ்ணு ஆலயங்களில், மாதவர்கள் வீட்டில் எல்லாம் துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத ஹிந்து வீடுகள் இல்லை. அவளை வணங்காமல் பூஜை இல்லை, விஷ்ணுவுக்கு நைவேத்யம் இல்லை. காலையிலும் மாலையிலும் துளசிக்கும் தான் தீபம் நமஸ்காரம். பிரார்த்தனை . 
லக்ஷ்மி விஷ்ணு மார்பில், துளசி அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே.

 

 

பத்ம புராணத்தில், பாதாள காண்டத்தில் ஒரு விஷயம் தெரியுமோ ?

சிவபெருமான்: ”நாரதா, துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள்’
எவன் ஒருவன் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ, அவனது சகல ஜன்ம பாவங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான். எவனது உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாவங்களும் எரிந்துவிடும் எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை தொடுகிறானோ , அவன் மோட்சம் எய்துவான்.
கிருஷ்ணனே அவனை எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார் .
எவன் துளசி கட்டையை, சமித்துகளோடு சேர்த்து வைத்துக்கொள்கிறானோ, அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான். 
துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை, 100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோதான பலனும் கொடுக்கும். 
கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் பண்ணும் உணவு, துளசி கட்டை கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால் மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.

ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம், பல லட்சம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல கிருஷ்ணனுக்கு பிடித்தவன் வேறு யாருமில்லை. 
துளசிக்கட்டையை அரைத்து சந்தனம் போல் கிருஷ்ணனுக்கு சாற்றியவன் ஈடில்லாத கிருஷ்ண பக்தன். 
துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான்.துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.

இன்னொன்று சொல்லட்டுமா. எவன் வழியிலே எங்காவது ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாவ, தோஷங்கள் நீங்கப் பெறுவான்.

துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன். காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

(துளசி கட்டை வேண்டும் என்பதற்காக துளசி செடியின் கிளையை ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம். காய்ந்த துளசி செடியிலிருந்து அதை சேகரிக்கலாம்).

 

 

துளசி ஸ்தவம் ஸ்தோத்ரம்

முனிவர்களே, சித்தர்களே, காந்தர்வர்களே, பாதாள லோக நாக வாசிகளே, கணீரென்று கிருஷ்ணனை, துளசியை பாடுங்கள். உபதெய்வங்கள் பிரபாவத்தை, சக்தியை எத்தனை கோடியாக புகழ்ந்தாலும், கேசவனின் சக்திக்கும் மகிமைக்கும் அவை ஈடாகுமா.கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் பாற்கடல் கடையப்பட்டபோது துளசியை தனது சிரத்தில் விஷ்ணு தாங்கினார்.

துளசி மாதா,நமஸ்காரங்கள். விஷ்ணுவின் சரீரத்தில் நீ சாற்றப்படும் போது, எல்லோரையும் நீ பரிசுத்தமாக்குபவள்.  துளசி தேவி, உனது தளத்தால் நான் ஸ்ரீ ஹரியை அர்ச்சிக்கும்போது எனக்கு ஒரு குறையும் தடையும் இல்லை. நான் தான் உன் பாதுகாப்பில் இருக்கிறேனே.
துளசியம்மா, உன்னை செடியாக கோமதி நதிக்கரையில் வளர்த்து அந்த கிருஷ்ணன் உலகை ஸ்ரேஷ்டமாக்கி, கோபியரை ரக்ஷித்தான். துளசி தேவி, பிருந்தாவனத்தை செழிப்பாக்கவும், கம்சன் மற்ற ராக்ஷசர்களை அழிக்கவும், விஷ்ணுவுக்கு பக்க துணையாக இருந்தவளே நீ தானே.

துளசி மாதா,நீ சாமான்யமானவளா. சரயு நதிக்கரையில் வசிஷ்டர் அறிவுரையில் ராமன் உன்னை வளர்த்து தானே ராக்ஷசர்களை அழித்தார்.உனக்கு நமஸ்காரம். அசோக வனத்தில் சீதா தேவி ராமனைப் பிரிந்து வாடும்போது, உன்னை அல்லவா த்யாநித்தாள். நீ அல்லவோ அவளுக்கு தெம்பை தந்தவள்.

அம்மா துளசி, சிவ பிரானை அடைய, ஹிமகிரியில் உன்னைத்தானே வளர்த்து பார்வதி தேவி வணங்கினாள் . எங்கள் நமஸ் காரத்தையும் சமர்பிக்கிறோம். ஏற்றுக்கொள்ளவும். அம்மா துளசி, கயாவிலே , தர்மாரண்யத்தில் பித்ருக்களை திருப்தி படுத்துபவளே. பரிசுத்த காரணி. உனக்கு நமஸ்காரங்கள்.

துளசி தேவி, ஸ்ரீ ராமபிரான் உன்னை வளர்த்தார்,லக்ஷ்மணன் உன்னை வணங்கினான், தண்டகாரண்யத்தில் சீதை உன்னை வளர்த்து பூஜித்தாள் . உனக்கு நமஸ்காரங்கள்.

துளசி தேவி, உன் பெருமை அறிவோம். எப்படி கங்கை மூன்று லோகங்களிலும் புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே போல் சகல ஸ்தாவர ஜங்கம ஜீவர்களும் வணங்குபவள் நீ.

அம்மா உன்னை வணங்கி தானே, ரிஷ்யமுக பர்வதத்தில் வானர ராஜன் சுக்ரீவன், வாலியை கொல்லவும், தாரையை அடையவும் முடிந்தது. உனக்கு நமஸ்காரங்கள்

ஹனுமான், உன்னை வணங்கியபிறகு தானே, சமுத்ரத்தை தாண்டினான், ராம கர்யத்தை வெற்றி கரமாக முடித்து திரும்பினான்.உனக்கு நமஸ்காரங்கள்

துளசியை தொடுவதாலே, சகல பாபங்களும் விலகுகிறதே, பிரம்மஹத்தி தோஷமும் கூட தீருமே. ரிஷி திலகங்களும் நாடும் துளசி மாதா உனக்கு நமஸ்காரங்கள்.

ஒரே ஒரு துளசி தளத்தை ஜலத்தில் இட்டு, ஸ்நானம் செய்தவன்,கங்கா ஸ்நான பலனையும், பாத்து பசுக்களை தானம் செய்த புண்யமும் பெறுவானே. உனக்கு நமஸ்காரங்கள் தாயே.

தேவ தேவிகளுக்குள் சிறந்தவளே, ஹரியின் பிராண வல்லபி, பாற்கடலில் பிறந்தவளே, எங்கள் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம்.


துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை கிருஷ்ணன் அவன் செய்த பாவங்களை மன்னித்து அருள்கிறார். துளசிஸ்தவம் பிரார்த்தனை புஸ்தகம் இருக்கும் வீட்டில் துரதிர்ஷ்டம் இல்லை. ஏன் என்றால் அங்கே அதிர்ஷ்ட தேவதை குடி கொண்டவள்.துளசி ஸ்தவம் பாராயணம் செய்பவன் மனதில் கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் கிடையாதே.

 



Leave a Comment