மஹாபலேஸ்வர சுவாமி திருக்கோவிலில் 108 சங்கு பூஜை...


மஹாபலேஸ்வர சுவாமி திருக்கோவிலில் 108 சங்கு பூஜை...மலைக்கோவிலூரில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ மஹாபலேஸ்வர சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிறைவு நாளில் 108 சங்கு பூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ மஹாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். கடந்த பல வருடங்களாக இந்த கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்து வந்தது.

இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோவிலை புனரமைக்க கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலை துறையின் உதவியோடு பொதுமக்களின் பங்களிப்போடு பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாட்கள் நடைபெற்ற இந்த மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று திருக்கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பூஜைகளும் நடைபெற்றது.

இதே போல இந்த கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 108 சங்கு பூஜையும் அதனைத் தொடர்ந்து யாக வேள்வியும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் மண்டல பூஜையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.



Leave a Comment