திருமாலுக்கு தசாவதாரம் போல, சிவனுக்கு அவதாரம் இல்லையா?


 

 

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தசம் என்றால் பத்து என்று பொருள். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன (தசாவதாரம்) மச்ச அவதாரம்,கூர்ம அவதாரம், வராக அவதாரம்,நரசிம்ம அவதாரம்,வாமன அவதாரம்,பரசுராமர் அவதாரம்,இராம அவதாரம்,பலராம அவதாரம்,கிருஷ்ண அவதாரம்,கல்கி அவதாரம் ஆகியவை ஆகும்.

தாசாவதார திருக்கோயில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன. கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், மதில்சுவர் கட்டுமானப் பணிகளை செய்த திருமங்கையாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தில் இரங்கநாதர் பத்து அவதார திருக்கோலத்திலும் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது.

திருமாலுக்கு தசாவதாரம் போல, சிவனுக்கு அவதாரம் இல்லையா? இன்று பலர் மனதில் இந்த வினா உள்ளது. இதற்கு ஆன்மீக அறிஞர்கள் கூறியதாவது.

அவதாரம் என்பது தன் நிலையிருந்து கீழிறங்கி உதவுதல் ஆகும். சரபேஸ்வரர்,பைரவர்,கங்காதரர், தட்சிணாமூர்த்தி என சிவனுக்கும் வடிவங்கள் உள்ளன. திருமால் மனிதனாக பிறந்ததால் அவதாரம் என குறிப்பிடப்படுகிறார். சிவன் பிறப்பு இல்லாமல் நேரடியாக தோன்றுவதால் அவதாரம் எனச் சொல்வதில்லை என்பதாகும்.

 

 

 



Leave a Comment