திருப்பதி தசாவதார சிலைகளைக் காண ஏற்பாடு


ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள தசாவதார சிற்பங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சிற்பங்களைக் காண ஏற்பாடு செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலின் உத்தரவின்படி, ஏழுமலையான் கோயிலில் உள்ள தொன்மையான தூண்களை தமிழகத்தைச் சேர்ந்த குழுவினரைக் கொண்டு மூலிகைகள் மூலம் சுத்தப்படுத்தும் பணியை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. மேலும் நன்கொடையாளர்களின் உதவியால் அத்தூண்களில் உள்ள சில சிலைகள் நன்றாகத் தெரியும் வகையில் அவற்றுக்கு வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் கோயில் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது.

அதேபோல் ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள பல மண்டபங்களில் யாளி, மோகினி, வடபத்ரசாயி, தாண்டவ கிருஷ்ணன், சஞ்சீவனி மலையுடன் அனுமன், லட்சுமி நாராயணர், மூன்று முகங்கள் கொண்ட பிரம்மா, சரஸ்வதி தேவி, யோக நரசிம்மர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. கோயிலின் யாசாலையில் கல்கி, திரிவிக்ரமர், வாமன அவதாரம், கிஷ்கிந்தா காண்டம், தானவர் சிலைகள் உள்ளன. ஊஞ்சல் மண்டபத்தில் சத்யபாமா, ருக்மணி சமேத வேணுகோபாலர், மற்ற மண்டபங்களில் கோவிந்தராஜ சுவாமி, சீதாராமர், வாலி - சுக்ரீவன் யுத்தம், கருடன், யசோதையுடன் கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகள் அங்குள்ள தூண்களின் செதுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் இச்சிலைகளைக் காண பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதியளித்து வந்தது. ஆனால் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாலும், அந்த மண்டபங்களில் உண்டியல் காணிக்கை நடைபெற்று வருவதாலும் மண்டபங்கள் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்டுள்ளன. இதனால் இச்சிலைகளை பக்தர்களால் பார்க்க இயலவில்லை. அவற்றை பக்தர்கள் காணும் வகையில் தேவஸ்தானம் தற்போது வழிவகை செய்து வருகிறது.



Leave a Comment