கடன் தொல்லை தீர்ப்பாள் பாளை.ஆயிரத்தம்மன்!


திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பாளையங்கோட்டை. நகரின் மையப்பகுதியில், அற்புதமாகக் கோயில் கொண்டு அருளாட்சி செய்கிறாள் ஸ்ரீஆயிரத்தம்மன்!

பாளை ஆயிரத்தம்மனை வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், கடன் தொல்லையில் இருந்து மீட்டெட்டுப்பாள் என்கின்றனர் பக்தர்கள்.

பிரசித்தி பெற்ற தலமாகத் திகழ்கிறது பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில். கர்நாடக மாநிலத்தின் மைசூர் போல, குலசேகரப்பட்டினம் போல, ஆயிரத்தம்மன் கோயிலிலும் தசரா விழா அமர்க்களப்படும். பத்துநாள் நடைபெறும் விழாவில், ஆயிரத்தம்மன் மற்றும் அதைச் சுற்றியுள்ள 12 கோயில்களில் இருந்து சப்பரங்கள் வீதியுலா வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். பத்தாம் நாள், இரவு வீதியுலா முடிந்ததும், 12 சப்பரங்களுடன் சம்ஹார விழா, கோலாகலமாக நடைபெறும் என்கிறார்கள் நெல்லைக்காரர்கள்!

இங்கு, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது விசேஷம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ராகுகாலத்தில் மாதுளைத் தோலால் நெய்விளக்கேற்றி, தொடர்ந்து 41 நாட்கள் வழிபடுகிறார்கள்!

இங்கே, தை மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவது கூடுதல் விசேஷம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, மனதார வேண்டிக் கொண்டால், கடன் தொல்லைகள் யாவும் தீரும்.

வீட்டில் சுபிட்சத்தைத் தந்து சுகங்களைத் தந்தருள்வாள் என்று ஆயிரத்தம்மனைக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.



Leave a Comment