கள்ளழகர் கோவிலில் ஆடி உற்சவம் தொடக்கம்


108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.மதுரையை அடுத்துள்ள திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற சிறப்புமிக்க இத்திருத்தலத்தில், நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் நடைபெறும் ஆடித்திருவிழா.

இந்த வருடத்திற்கான ஆடி உற்சவ விழா இன்று (19-07-2018) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று இரவு அன்னவாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும், நாளை காலை தங்கப்பல்லக்கு உற்சவமும்,  இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நாளை மறுநாள் 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இரவு அனுமார் வாகனத்திலும், பின்னர் 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடக்கவிருக்கிறது.

23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் அழகர் புறப்பாடு நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் அன்னையர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து  காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். தொடர்ந்து 28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தி நிகழ்சியும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த  மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும் நடைபெறவிருக்கிறது. திருவிழாவை முன்னிட்டு அழகர் தரிசனத்தை காண பெருந்திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.



Leave a Comment