சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் 14-ந்தேதி திறப்பு

09 June 2018
K2_ITEM_AUTHOR 

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அதற்கு முந்தைய நாள் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி மனு நம்பூதிரி முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகமும் நடைபெறுகிறது. ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதையொட்டி, தரிசனத்திற்காக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்துள்ளது. அத்துடன் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.