வேதங்களே ஈசனை வணங்கிய தலம்


வேதங்களே ஈசனை வணங்கிய தலம் வேதாரண்யம். இக்கோயிலின் பிராகாரத் தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு. இத்தலத்து நாயகியான உமையம் மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணை யில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.

ஸ்ரீராமர், ஸ்ரீபிரம்மா, விஸ்வாமித்திரர், அகத்தியர் முதலானோர் வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம், வேதாரண்யம். ஸ்ரீசரஸ்வதிதேவி வீணையின்றிக் காட்சி தரும் ஆலயம். ஸ்ரீநடராஜ பெருமானின் 16 சபைகளில் இந்தத் தலமும் ஒன்று. சப்தவிடங்கத் தலங்களில், இந்த ஆலயத்தை புவனவிடங்கத் தலம் என்று போற்றுவார்கள்.

அவ்வளவுதானா? திரிசங்கு சொர்க்கத்தைப் பெற்ற தலம். சேர, சோழ, பாண்டியர்களும் வழிபட்ட பூமி. புனித நதியாம் கங்கை, இங்கே உள்ள மணிகர்ணிகையில் நீராடி இன்னும் புனிதம் பெற்ற தலம். தேவார மூவரும் பாடிய ஆலயம் எனப் பல பெருமைகள் கொண்டது வேதாரண்யம்!

இத்தனைப் பெருமைகளுக்கும் சிகரம் வைத்தது போல், வேதங்கள் நான்கும் ஆரண்யங்களாக, அதாவது வனங்களாக, காடுகளாக இருந்து சிவ வழிபாடு செய்த ஒப்பற்ற தலம் என்பதால், வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் இந்தத் தலத்துக்குப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

வேதாரண்யம் எனும் புண்ணியத் தலத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கோயில் சந்நிதியில் உள்ள தீபத்தை, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக விளக்கில் ஓடி, அறியாமல் தூண்டியதாலேயே ஒரு எலி, மறுபிறப்பில் மூவுலகையே ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியான தலமும் இதுவே!

நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ., திருத்துறைப் பூண்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.



Leave a Comment