திருப்பதி ஏழுமலையானுக்கு முன் யாரை வழிபட வேண்டும்


திருப்பதிக்கு போகிறவர்கள் முதலில் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத்தான்.இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது.
என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்றும், நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்றுசொல்வது போல் விளக்கம்.பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம்.
பின்பே பெருமாளைச் சேவிக்க செல்ல வேண்டும்.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருமலையில் 64 புண்ணியதீர்த்தங்கள் உள்ளன.இந்த தீர்த்தப்பகுதிகளில் தான் சீனிவாச பத்மாவதி கல்யாணத்தில் பங்கேற்ற விருந்தினருக்குத் தேவையான உணவு வகைகள் தயாரானதாக திருமலை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயில் அருகில்உள்ள சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் சோறும், பாபவிநாசத்தில் சாம்பாரும், ஆகாசகங்கையில் பாயாசமும், தும்புரு தீர்த்தங்களில் சித்ரா அன்னங்களும், குமார தீர்த்தத்தில் அவியல், பொரியல் வகைகளும் தயாராயின.இவை தவிர, கபில, பாண்டவ, பல்குண, சக்கர, பத்மஸரோவம் தீர்த்தங்களிலும் பல்வகை உணவுகள் தயார் செய்யப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.திருப்பதி சீனிவாசனை வளர்த்தவள் வகுளாதேவி. முற்பிறவியில் யசோதையாக இருந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியம் பெற்றவள்.
துவாபரயுகத்தில் அஷ்டமகிஷிகள் என்னும் எட்டுப்பெண்களைக் கண்ணன் திருமணம் செய்தார்.ஆனால், யசோதைக்கு ஒரு திருமணத்தையும் காணும் பேறு பெறவில்லை.அக்குறையைப் போக்க கலியுகத்தில் வகுளாதேவியாகப் பிறந்தாள் யசோதை.திருப்பதியில் நடந்த சீனிவாசக் கல்யாணத்தை கண்டுகளித்தாள்.வகுளாதேவி சந்நிதி, திருப்பதி கோயில் மடப்பள்ளியில் உள்ளது.இவளுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயரும் உண்டு.
இவளது மேற்பார்வையில் ஏழுமலையானுக்கு உணவு தயாராவதாக ஐதீகம்.உணவை முடித்து மகன் ஓய்வுக்குச் சென்ற பின், இரவில் மட்டும் இவளுக்கு நைவேத்யம் நடக்கும்.பிள்ளை சாப்பிடுவதற்காக, சமையல் பணியை சாப்பிடாமல் கூட மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.
ராமானுஜர் திருமலையின் புனிதம் கருதி காலால் நடக்க விரும்பாமல் தவழ்ந்தே மலையேறினார். வழியில் அவருடைய முழங்கால் முறிந்தது. அந்த இடமே முழங்கால் முறிச்சான் என்று அழைக்கப்படுகிறது. இதனை மோக்காலு மிட்டா என்று சொல்வர்.இந்த இடத்தில் ராமானுஜர் கோயில் உள்ளது.
மோக்காலு மிட்டாவைக் கடந்தால் ஏழுமலையில் ஒன்றான சேஷாத்ரியின் சிகரத்தை அடையலாம். சிறுவனாக இருந்தபோது, அன்னமய்யா என்னும் பக்தர் மலையேறி வந்த களைப்பில் மோக்காலுமிட்டாவில் மயங்கி விழுந்தார்.
அவரின் பசிதாகம் போக்க பத்மாவதி தாயாரே, பாமரப் பெண்ணாக வந்து மயக்கம் தெளிய நீரும், உணவும் கொடுத்ததாகச் சொல்வர்.இவர் திருப்பதி ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார்.



Leave a Comment