திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை


திருப்பதியில் வாரத்தில் 3 நாட்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் அதிகளவில் சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதியில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.
கோடைக்காலத்தையொட்டி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களால் திருமலையில் கூட்டம் அதிகமாக இருக்கும். வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்து, சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்காக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, இலவச தரிசனத்தில் அதிகளவில் சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களை குறைந்த எண்ணிக்கையில் தரிசனத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல், ஜூலை மாதம் 16-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
தரிசன வரிசைகளில் செல்லும் பக்தர்களுக்கு 24 மணிநேரமும் பால், டீ, காபி, குடிநீர் மற்றும் உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அன்னப்பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் கூடுதல் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம். லட்டு பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, குறைந்தபட்சம் தினமும் 3½ லட்சம் லட்டுகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பவும், அதனை கண்காணிக்கவும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாரத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். 300 ரூபாய் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம். இந்த நடைமுறைக்கு பக்தர்கள், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.



Leave a Comment