வியர்க்கும் முருகப்பெருமான்!


 

வியர்க்கும் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்ய இன்று மாலை அன்னை பராசக்தியிடம் வேல் வாங்குகிறார்.

இன்று மாலை 24.10.2017 சிக்கல் சிங்காரவேலர் சன்னதியில், 1008 அண்டங்களையும், 108 யுகமாக ஆண்டு தீவினை புரிந்த மும்மலங்கள் ரூபமாக விளங்கிய சூரபதுமன், சிங்கமுகன், தாருகன் ஆகியோரின் தீராத கொடுமையில் இருந்து அனைத்து லோகங்களையும் தேவர்களையும் காக்க, போரிடும் முன்பு சிக்கல் நவநீதேஸ்வரரையும், வேல்நெடுங்கண்ணி அம்பாளையும் வணங்கி ஆசி பெற்ற போது,

அன்னை பராசக்தியானவள் தனது சக்தியை வேலாயுதமாக வழங்க, அந்த பரவசத்தில் முருகனுக்கு வியர்க்க,சஷ்டியில் சூரபதுமனை சம்ஹரித்து அருள் புரிந்தார் முருக பெருமான்.ஒவ்வொரு ஆண்டும் சிக்கல் சிங்காரவேலருக்கு சஷ்டிக்கு முந்திய நாள் இரவு பஞ்சமி திதியில் வேல்நெடுங்கண்ணி (வேல் போன்ற கண்களை உடையவள் ) அம்பாளிடம் சக்தி வேல் பெரும் நிகழ்வு அற்புதமாக நடைபெறுகிறது. திருத்தேர் நிலைக்கு வந்த பிறகு இரவு சிங்காரவேலர் நாதஸ்வரம் மேள தாளங்கள் முழங்க தேரில் இருந்து அற்புதமாக ஆடிக்கொண்டு அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார்.

அன்னைக்கு சிறப்பு அலங்காரத்துடன் வெள்ளை சார்த்தி, (சிவ ரூபமாய் தேவி திகழ்வதால் சிவன் சன்னதி சாத்தப்படும், அம்பாள் சன்னதியில் அன்று மட்டும் குங்குமத்திற்கு பதில் திருநீறு தருவர்) தீபாராதனை நடைபெற்று அர்ச்சகர் தேவியிடம் உள்ள சக்தி வேலை பெற்று சிங்கார வேலருக்கு சார்த்துவார். துள்ளி துள்ளி ஆனந்தமாக அரோஹரா அரோஹரா கோஷம் முழங்க அதை பெற்று கொண்ட பெருமானின் திருமேனி முழுக்க முத்து முத்தாக அரும்பி வியர்க்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

அதோடு சுவாமி தன் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளிய பின்னர் பக்த கோடிகள் அனைவரும் வரிசையாக சென்று  சுவாமியை அருகில் தரிசித்து வலம் வரலாம். சுவாமியுடன் வள்ளியம்மை, தெய்வானை அம்மைக்கும் வியர்க்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு அதிகாலை அபிஷேக ஆராதனைகள் தொடங்கி சூரசம்ஹாரம் அன்று மாலை நடைபெறும். கடவுள் உண்டா என்று கேட்கும் அத்தனை பெருக்கும் தன் இருப்பை நிரூபிக்க கூடிய தலங்களில் ஒன்று தான் சிக்கல் சிங்கார வேலர் திருக்கோயில் ஆகும்..



Leave a Comment