சகல நன்மைகளையும் தரும் தியானம்


 

 

அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தவும், இறைவனை நோக்கி நம் மனதை செலுத்தவும் தியானம் ஒரு சிறந்த கருவியாகும். மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையே பதித்து, மந்திர ஜபம் செய்வது தியானத்தின் சிறப்பு.  

தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து செய்யும் போது பலன் இரட்டிப்பாகும். தியானம் செய்யும் போது ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் செய்ய வேண்டும். நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்யவே ஆசனம். ஜபம்செய்ய நதிக்கரை, மலை, பசுத்தொழுவம்,புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. பூஜை அறை, நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகளும்  ஜபம் செய்ய சிறந்த இடம்.

ஆனாலும் பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தரும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும்.  ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுத்தலாம்.   மாலையாக இருந்தாலும், இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், மனம்  இறைவனிடம் இருக்க வேண்டும்.

தியானம் பழகும் ஆரம்பக் காலத்தில் , மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவின் பாதாரவிந்தங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டோம் என்றால்  தியானமும் ஜபமும் நமக்கு எளிதாக கைக் கூடும்.

சில வழிமுறைகளைக்  கடைப்பிடித்தால் உபாசனையில் நாம் ஓரளவு வெற்றி பெறலாம். நமக்கான உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து, குரு அறிவுரைப்படி உபாசிக்க வேண்டும். நம்முடைய ஆத்மாவை யார் நெருங்கி வரமுடிகிறதோ,அவரே நம் குரு.

உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் . உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை . கூடியவரை ஒரே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம்.

அங்கு ஆசனத்தை விரித்து அதில்  தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி அமர்ந்துக் கொள்ளவும். கைகள் மடி மீது வைத்து, கண்களை மூடிக் கொள்ள வேண்டும். 

 நமது மூச்சின் மீது கவனம் வைத்து, மூச்சை மெதுவாக இழுத்து விட்டு பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.

 மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.  ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்க வேண்டும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உபாசனை  தெய்வத்திடம் நிறுத்தவேண்டும்.

பின்பு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை ,குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். நம் முழு கவனமும் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்க வேண்டும். எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால் தான் பலன் தர ஆரம்பிக்கும்.

 தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழ வேண்டும்.

கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலையான  தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது என்கிறது சாஸ்திரம்.

கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி.தகுந்த குருவிடம் தியானத்தையும், உபாசனைகளையும் தெரிந்துக் கொண்டு அதை பழகும் போது சகல நன்மைகளும் உண்டாகும்.

 



Leave a Comment