ஆடிபெருக்கு விழாவின் சிலமுக்கியத்துவங்கள்;


பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று சுமங்கலிபூஜை நடத்துவர்.

திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர். இந்த மங்கல திருவிழா வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

 

தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர்.

ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.

இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது.

“ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக”

என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

 

ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.

 

பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

 

ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி விரதம்:வரலட்சுமி விரதம் ஆடிமாதம் சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமையில் வரும். இந்த ஆண்டு வருகிற (வெள்ளிக்கிழமை) வருகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என பெயர் பெற்றது.
திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்ம நோய்கள் நீங்கும், திருமணத்தடை அகலும்.



Leave a Comment