திருப்பதியில் நன்கொடை திட்டத்தின் கீழ் வாடகை அறைகள்....


திருப்பதியில் உள்ள வாடகை அறைகளை காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை அறங்காவலர் குழுவின் இறுதிக் கூட்டம் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில், வரும் மே மாதம் 20 முதல் 26-ஆம் தேதி வரை ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மாவட்டத்துக்கு ஆயிரம் மாணாக்கர்களை தேர்ந்தெடுத்து தேவஸ்தானம் சார்பில் சுபப்ரதம் வகுப்புகள் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கு கொள்ளும் மாணாக்கர்களுக்கு ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் வகுப்புகள், தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் புதிய காத்திருப்பு வளாகம் கட்ட ரூ. 2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் நடத்திய தலைமுடி விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ. 5.27 கோடி வருமானம் கிடைத்தது.
தேவஸ்தான காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ், திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வறையில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 15 லட்சமும், விஷ்ணு நிவாசத்தில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 10 லட்சமும், சூட் அறைகளுக்கு ரூ. 18 லட்சமும் என நன்கொடை பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு பக்தர்கள் தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய அரசு உதவியுடன் திருப்பதியில் அறிவியல் அருங்காட்சியகம் ஏற்படுத்த 19 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது.
திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு வெள்ளியினால் ஆன புதிய சிம்ம வாகனம் தயாரிக்க ரூ. 72 லட்சமும், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பொன்விழா வளைவு அருகில் ஏழுமலையான் கோயில் கட்ட ரூ. 29 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment