நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்


சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கலில் கல்லில் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பகல் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment