திருமலையில் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகாந்த சேவை....


திருப்பதி திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தம் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகாந்த சேவை தொடங்கியது.
அஞ்ஜனாத்திரி மலையில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி தீர்த்தக்கரையில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலில், திருமலைக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ஆஞ்சநேயரை வணங்கிச் செல்வது வழக்கம்.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோயில் திறந்திருக்கும். அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல தேவஸ்தானம் படிகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் இதுவரை ஏகாந்த சேவை நடத்தப்படவில்லை. அதனால் கோயில் பூஜாரி மாதவதாஸ் தலைமையில் முதல்முறையாக தீபாவளி நாளான கடந்த 29-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவை தொடங்கப்பட்டது.
ஏகாந்த சேவையின்போது பயன்படுத்தப்படும் ஊஞ்சல் வடிவ மரக்கட்டில், பட்டால் ஆன மெத்தை, தலையணை, துப்பட்டி உள்ளிட்டவற்றை பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
தற்போது, உள்ளூர்வாசிகள், பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் ஏகாந்த சேவையில் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர்.



Leave a Comment