மரியாளின் பிறப்புப் பெருவிழா....


தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாளின் பிறப்புப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூண்டி மாதா திருஉருவம் பொறிக்கப்பட்ட கொடியைப் பக்தர்கள் பேராலயத்தைச் சுற்றி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, சிறு தேரை பக்தர்கள் தூக்கி வந்தனர். பிறகு, கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் எப். அந்தோணிசாமி கொடியைப் புனிதம் செய்து ஏற்றினார்.

இதில், பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஷ் ஜேசுதாஸ், ஆன்மிக தந்தைகள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் சுற்றுவட்டார பங்குத் தந்தைகள் பங்கேற்றனர். ஆயர் தலைமையில் மரியாள் - தூய ஆவியின் கோயில் என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து விழா நாள்களில் சிறப்பு திருப்பலியும், சிறு தேர் பவனியும் நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி செப்டம்பர் 8ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது.



Leave a Comment