திருநின்றவூர் பக்தவச்சல பெருமாளை தரிசிக்கலாம் வாங்க....


"சீரறிந்து தோழிமீர்! சென்று கொணர்ந்தெனக்குப்
போரமுலை முகட்டிற் பூட்டுமினோ- தேரவுணர்
பொன்றவூர்புட் கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர்.'
108 திவ்விய தேசங்களில் 58-ஆவது திருத்தலமாக விளங்குகிறது திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில்.
பகவத் ஸ்ரீராமானுஜர் வடமொழியில் மங்களா சாசனம் செய்திருப்பது இந்த கோயிலுக்கு கூடுதல் சிறப்பு.
திருமங்கையாழ்வார் திருவள்ளூருக்கு வந்து சிலநாள் தங்கியிருந்து, திரு எவ்வுள் கிடந்தான்மீது "பலச்சுருதி' யுடன் பதினோரு பாசுரங்கள் பாடி னார். பிறகு தென்கிழக்காய் பத்து கல் தொலைவிலுள்ள திருநின்றவூருக்குச் சென்றார்.
ஆழ்வார் அங்கு வந்தபோது இரவு நேரமானதால், திருக்கோவில் நடையடைக் கப்பட்டு பெருமாள் ஏகாந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எனவே ஆழ்வார் பயணத்தைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்து சேர்ந்தார்.
திருமங்கையாழ்வார் திருநின்றவூரில் சேவை சாதிக்கும் திருமகளையும் பக்தவத்சலப் பெருமாளையும் சேவிக்காமல்- பாசுரங்கள் செய்யாமல் போனது திருமகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.
அவள் பெருமாளை உசுப்பி, கடல்மல்லைக்குச் சென்று திருமங்கையாழ்வாரிடம் தங்களுக்கான பாசுரங்களைப் பெற்றுவருமாறு சொல்ல, பிராட்டியின் சொல்தட்ட முடியாத பெருமாள், கடல்மல்லைக்குச் சென்றார். அப்போது, திருமங்கையாழ் வார் தலச்சயனப் பெருமாள் சந்நிதியில் நின்று சேவித்துக் கொண்டிருந்தார். தான் வந்திருப்பதை ஆழ்வாருக்கு குறிப்பால் உணர்த்திய திருநின்றவூர் பெருமாள், தான் வந்த நோக்கத்தை சூசகமாகத் தெரிவித்தார்.
பெருமாள் வருகையைப் புரிந்துகொண்ட ஆழ்வார் பூரித்துப் போனார். மாமல்ல புரத்திலிருந்து கொண்டே, திருநின்றவூர் பெருமாள்மீது பாசுரம் செய்தார்.

பாசுரத்துடன் திரும்பிவந்த திருமாலிடம் தாயார், ""எல்லா திவ்விய தேசங்களுக்கும் ஆழ்வார் பத்திற்கு மேற்பட்ட பாசுரங்கள் பாடியவர். நமக்கு மட்டும் ஏன் ஒரு பாசுரத்து டன் நிறுத்திக்கொண்டார்?'' என்று கேட்டு, மேலும் பாசுரங்களைப் பெற்று வருமாறு எம்பெருமாளை அனுப்பி வைத்தாள்.

அதற்குள் திருமங்கையாழ்வார் பல திவ்விய தேசங்களைப் பாடியும், சேவித்துக்கொண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கண்ண மங்கைக்கு வந்துசேர்ந்தார்.

இங்கே ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், திருக்கண்ணமங்கை பெருமாளின் திருநாமமும் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள்தான். திருநின்றவூர் பெருமாள் திருக்கண்ணமங்கை பெருமாளின் சந்நிதியில் நின்றிருந்த திருமங்கை ஆழ்வாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தோடு, நோக்கத்தையும் உணர்த்தினார். பரவசத்தால் நெகிழ்ந்துபோன மங்கை மன்னன், கீழ்வரும் பாசுரத்தை அருளிச் செய்தார்.
இருப்பினும் இந்த கோயிலுக்கு தல வரலாற்றிலோ அல்லது புராணங்களிலோ கட்டியவர்களைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
ஆனாலும் சரித்திரப் பின்னணியும் இத்திருக் கோவிலுக்கு உண்டு. இரண்டு பாசுரங்களைப் பாடிய திருமங்கை ஆழ்வார் 8-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தவர் என்பதும்; கி.பி. 690-728 வரை- அதாவது 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில் இத்திருக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம்.



Leave a Comment