மரணமிலாப் பெருவாழ்வு


- "மாரி மைந்தன்" சிவராமன்

வள்ளலார் சரித்திரம் -  பாகம் -8

சரியாக 
51 வது வயதில் 
அந்த முடிவை 
எடுக்க வைத்தார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

அதற்கு முன் சிலமுறை 
சித்தி வளாக அறையைத் தாழிட்டுக் கொண்டு 
பல நாட்கள் 
வெளியே வராமல் 
அப்படியே 
இருந்து விடுவார்
வள்ளல் பெருமான்.

ஆனால் 
அன்று நடந்தது வேறு.

அன்பர்கள் புடைசூழ அறைக்கு வெளியே கண்ணீருடன் 
நின்றிருந்தனர்.

தொழுவூரார் 
கல்பட்டு ஐயா 
சாம்பசிவ சாஸ்திரியார் உள்ளிட்ட 
அன்பு நிறைந்த 
அன்பர்கள் 
செய்வதறியாது 
கலங்கிய வண்ணம் காத்திருந்தனர்.

அது தை மாதம்.
புனர்பூச நட்சத்திரம். வெள்ளிக்கிழமை.
மணி நள்ளிரவு 12.

கரும சித்தி 
யோக சித்தி 
ஞான சித்தி 
என்னும் 
முத்தேக சித்திகளை அடைந்திருந்த 
வள்ளல் பெருமான்...

படைத்தல் 
காத்தல் 
அழித்தல் 
மறைத்தல் 
அருளல் எனும் இறைவனுக்குரிய ஐந்தொழில் ஆற்றலைக் கைவரப் பெற்றிருந்த 
வள்ளல் பெருமான்....

எல்லாம் வல்ல 
இறைவனைப் போல் 
எல்லாம்வல்ல சித்தராக ஞான உலா வந்த 
வள்ளல் பெருமான்....

மரணமிலாப் பெருவாழ்வு மனிதருக்குச சாத்தியம் 
என போதித்து வந்த 
வள்ளல் பெருமான்....

சித்தி வளாகத்
திருவறைக்குள் 
நுழைந்தார்.

'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி'
எனும் மகாமந்திரம் 
கனத்த இதயங்களிலிருந்து வெளிப்பட்டுக்
கொண்டிருந்தது.

அறை உள்ளிருந்து சாத்தப்பட்டது. 
திருக்காப்பிட்டு 
வைபவம் 
வரலாறானது.

'பின்னொருநாள் 
வருவேன்'
எனப் பூடகமாகச்
சொல்லிச் சென்ற 
வள்ளல் பெருமானைத் தரிசிக்க 
வழிமேல் 
விழி வைத்துக் காத்து கொண்டிருக்கின்றனர் அவரது அன்பர்கள்.

இன்றுவரை 
மருதூரிலும் 
தர்மச் சபையிலும் 
ஞான சபையிலும் 
சித்தி வளாகத்திலும்  அருள்வேண்டி 
கூடி நிற்கின்றனர்.

அனுதினமும் 
பெரும் கூட்டம்.

தைப்பூசத்தன்றும் 
மாதம் தோறும்
பூசம் தோறும்
ஏழு திரை நீக்கி 
ஜோதி காட்டும் 
வைபவத்தின் போது 
பெருகும் கூட்டம் பெருமானின் 
அருளாற்றலுக்கு 
நடைமுறைச் சான்று.


பெருமானார் 
சித்தி அடைந்த பின்னர் பலத்த 
சர்ச்சை எழுந்தது.

அவரது 
சித்தியை உணர்ந்த சன்மார்க்க அன்பர்கள் அவரைப் 
போற்றி வணங்கும் 
பக்தர்கள் கூட்டம்
ஒருபுறம்.

சாகாக்கலை என்னும் மீண்டும்
பிறவாக் கலையை அனுபவத்தில் பெற்று இறையோடு இறையாக
ஒளியோடு ஒளியாக
இரண்டறக் கரைந்து மரணமிலாப் பெருவாழ்வின் அனுபவ வெளிப்பாடாய் வள்ளல் பெருமான் 
சித்தி அடைந்தார் 
என்பதை ஏற்காத
இன்னொரு கூட்டம்.

இவர்கள் எதிர் தரப்பு.

சர்ச்சைகள் வலுத்தன. விமர்சனங்கள் வெடித்தன.

வெள்ளைக்கார
கலெக்டர் வந்தார்.

ஆராய
கூட வந்த 
குறுக்கு புத்தி 
தாசில்தார் 
போலீசையும் 
அழைத்தார்.

அறையினுள் 
திருக்காப்பிட்டு 
கொண்டவர் 
இடை நாளில் 
சந்து பொந்துகளில் வெளியேறி இருப்பாரா 
என கூரை ஏறியும் 
சல்லடை போட்டும் 
தேடிச் சலித்துப் போயினர்.

வெள்ளைக்கார
கலெக்டரோ 
பெருமானைப்பற்றி அங்கிருந்த அன்பர்களிடம் விசாரித்து 
நெகிழ்ந்துபோய் திருப்பணிக்கு 
20 ரூபாய் வழங்கி விட்டு மனநிறைவோடு விடைபெற்றார்.

அந்த 
கலெக்டரின் பெயர் 
ஜே.ஹெச். கார்ஸ்டின்.

அவர் 
வள்ளல் பெருமானின் வரலாறை 
அரசு கெஸட்டாக வெளியிட்டார்.

பின்னாளில் 
தொழுவூரார் 
பிரம்ம ஞான சங்கத்திற்கு பெருமான் குறித்து 
ஒரு வாக்குமூலம் தந்தார்.

இவ்விரண்டும் 
வள்ளல் பெருமானின் 
திவ்விய சரித்திரத்தின் அழிக்க முடியாத ஆவணங்கள்.

அவற்றிலிருந்து 
சில உண்மை வரிகள்.

'அவர் பாடல்கள் 
மேலான 
அருள் அனுபவ 
வாழ்க்கை 
விளக்கங்களைக் கொண்டவை. 

இறந்தவர்கள் 
திரும்பவும் எழுந்து 
நம்முடன் 
இருக்கப் பார்ப்போம் 
என்றவர் வள்ளலார்.

இந்த நம்பிக்கையில் பிராமணர்கள் கூட இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கத் தொடங்கினர்.

பல கிராமத்தினர் இறந்தவர்களை எரிக்காமல் வடலூருக்கு 
கொண்டு வந்து 
சமாதி வைத்தார்கள்.

திருக்காப்பிட்டு கொண்ட அறையில்
பின்னர் அவர் காணப்படவில்லை.

தன்னுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.'

இவையே 
கார்ஸ்டின் ஐ.சி.எஸ் கையொப்பமிட்டு வழங்கியிருக்கும் 
ஆவணச் சான்று.

உடன் வாழ்ந்த 
தொழுவூராரின் வாய்மொழிகள்...

'இவர் 
ஒரு சிறந்த
ஏம சித்தர்.

மாமிசம் உண்பவரை 
மாற்றும் 
அற்புதப் பார்வை 
கொண்டவர்.

ஐம்பதாவது வயதை
அடைந்தபோது 
உலகை விட்டுப் போகப் 
போவதாகச் சொல்லி சீடர்களை 
ஆறுதல்படுத்த தொடங்கினார்.

ஆன்ம நேயத்தை விமர்சையாக போதித்தார்.

வள்ளல் பெருமானின் 
திவ்விய சரித்திரம் 
அவர் சித்தி 
அடைந்த பின்னரும் 
தொடரும் அற்புதம். தொடர்வது அற்புதம்.

அவர் அருளிய 
சன்மார்க்க நெறிகள் 
சாதி, மதம், நாடு, 
மொழி, இனம்,காலம்
கடந்து 
நிலைத்து நிற்பது.

அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்ஜோதி !

வடலூர் பெருவளி 
பயணிப்போருக்கு இறையருள் பேரொளி புலப்படும்.

அது 
வேறு எங்கும் 
இல்லாத 
வேறு எங்கும் 
கிடைக்காத சிறப்பு.

(நிறைவு)



Leave a Comment