மௌனம் கண்ட சதாசிவ பிரம்மேந்திரர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

கும்பகோணம் 
ஸ்ரீ மடத்தின் 
குரு 
பரமசிவேந்திரா 
பரமகுரு மட்டும் அல்ல.

அவர் 
காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த
58 வது பீடாதிபதி.

சிவராமகிருஷ்ணனாக தஞ்சமடைந்த சீடனை  'வித்வான் சதாசிவம் ' 
என உயர்த்தி
பிற்காலத்தில்
தரணி போற்றும்
சதாசிவ பிரம்மேந்திரராக வார்த்தெடுத்த 
குரு மகா சன்னிதானம்.

குரு பரமசிவேந்திராவின் பார்வைக்கு 
அரசர்கள் எல்லாம் காத்திருப்பது வழக்கம்.

அக்கால 
மைசூர் மன்னனுக்கு
ஓர்  ஆஸ்தான வித்வான்  தேவையாய் இருந்தது.

அவன் 
பரமசிவேந்திராவை
தரிசித்துக் 
கோரிக்கை வைத்தான்.

'தக்கதொரு ஆஸ்தான வித்வான் வேண்டும் '
என்று வேண்டி நின்றான். 

அது சமயம் தான்....
குருநாதரால் 
அடையாளம் காணப்பெற்று
சதாசிவம் என்ற
புதிய நாமகரணம் 
சூட்டப் பெற்றிருந்தார் சிவராமகிருஷ்ணன்.

பற்பல கற்று
பிரம்மஞானம் 
கற்றுத் தேர்ந்து மடமெங்கும் 
புகழ் பரப்பிக் கொண்டிருந்தார்.

பரமசிவேந்திரா
மைசூர் மன்னனின் வேண்டுகோளை ஏற்று சீடர் சதாசிவத்தை
மைசூருக்கு அனுப்பிவைத்தார்.

குரு சொல்லை ஏற்று மறுப்பின்றி பயணமானார் மைசூர் நாட்டிற்கு.

மைசூர் அரண்மனையில் வித்வான் சதாசிவத்தின்
ஞானக் கொடி
பட்டொளி வீசிப் பறந்தது.

அரசனின்  எல்லாவற்றுக்கும்
எதற்கும் 
பிரதானமாக இருந்தார்.

அவரன்றி ஓரணுவும் அசையாத நிலை 
விரைவில் வந்தது.

'பேச்சாற்றல் மிக்கவர் ' 'சொல்லின் செல்வர் ' 'தர்க்கத்தில் வல்லவர் '
என்று 
மன்னன் மட்டுமல்ல மைசூரே கொண்டாடியது.

கொண்டாட்டம் 
வரும்போது 
திண்டாட்டமும்
வரும் தானே?

வந்தது.

சதாசிவத்தின் புகழ்
ஏற்கனவே அவையில் 
கோலோச்சிக் கொண்டிருந்த 
சிலருக்கு காழ்ப்பை
உண்டு பண்ணி வந்தது..

பொறாமை பேச்சுக்கள் கொட்டமடிக்க ஆரம்பித்தன.

போதாக்குறைக்கு 
எதிலும் நிறை விரும்பும் 
சதாசிவம்
அரசனை நாடி வந்து 
புகழ் கவி பாடி
பரிசில் பெற வருவோரை கேள்விகளால் 
திணற அடித்தார்.

பரிசுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த சதாசிவம்
'அரசர் கொடுக்க ஆசைப்பட்டாலும் இவர் விட மாட்டார் 'என்னும் அவப்பெயர் பெற்றார்.

கற்றறிருந்த 
சாஸ்திரி ஒருவர்.
ஊர் தஞ்சாவூர்.
பெயர் கோபாலகிருஷ்ண சாஸ்திரி..

விவரமானவர்.
வில்லங்கமானவரும் கூட.

மைசூர் 
சமஸ்தான வித்வான் 
பதவி மீது அவருக்கு வெகுகாலமாக ஒரு கண்.

எப்படியாகிலும் சதாசிவத்தை வென்று சமஸ்தான வித்துவானாக வேண்டும் என்று துடித்தார் 

மைசூர் வந்தார்.

போராடி ஜெயிப்பதை விட கூடிக் கெடுக்கலாம் 
என முடிவெடுத்தார்.

சமஸ்தானம் வந்தவர் சதாசிவத்தின் 
பாதங்களில் சரணடைந்தார். 

"பணி செய்யக் காத்திருக்கிறேன்.....
ஆட்கொள்ள வேண்டும்" புன்னகைத்த
சதாசிவம் சம்மதித்தார்.

நம்பிக்கையூட்டும் வகையில் 
பணிகள் பல 
செய்தார் சாஸ்திரி.

சதாசிவத்தின் 
காலைப் பிடித்தவர் 
காலைப் பிடித்திழுக்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்.

ஒரு நாள்...
சதாசிவத்தின் 
குரு பற்றியும் 
குருநாதர் இருக்கும் 
இடம் பற்றியும் 
செல்லும் வழி குறித்தும் பேச்சுவாக்கில் கேட்டறிந்தார்.

பின்னொரு நாள்
குருவின் பாதம் தொட்டு
சொந்த ஊருக்கு
சென்று வருவதாகக் கூறி
குருவின் குருநாதரைத் தரிசிக்க விரைந்தார்.

பரமகுரு
பரமசிவேந்திராவைக் கண்டு 
தரிசித்த மாத்திரத்தில் வித்வான் சதாசிவத்தை ஏகத்துக்கும்
புகழ்ந்து தள்ளினார்.

ஒவ்வொரு 
புகழ் வார்த்தையும்
குருவின் செவிகளில் தேனாகப் பாய்ந்தன.

 மகிழ்ந்தார்.

தன் சீடன் அவையத்து முந்தி இருப்பதைக் கேட்டு மகிழ்வதை தவிர குருவுக்கு வேறென்ன பேறு 
இருக்க முடியும் ?

இது தான் 
தருணம் என்று
சாஸ்திரியார் 
சதி பண்ணத் தொடங்கினார்.

"குருநாதா....!
உங்கள் சீடர்களில் 
மிக உயர்ந்தவர் 
சதாசிவ சுவாமிகள்.

அவரின் எல்லை சமஸ்தான வித்வான் அல்லவே ?!!!

பரிசில் பெற
வருகின்ற புலவர்களிடம் தன் மேதாவித்தனத்தைக் காண்பித்து 
அவர்கள் வயிற்றில் அடிக்கிறார்.

அவர்கள் சமஸ்தானத்தையும் சேர்த்தே திட்டுகிறார்கள்...

எப்பேர்ப்பட்ட மகான்
நம் சதாசிவம் சுவாமிகள்..?

அவர் நோக்கம் 
தவமாய் அல்லவா இருக்கவேண்டும்?

அதில் அல்லவா 
அவர் மேலும் 
சிறக்க வேண்டும்.

தவத்தில் சிறந்தால்
மைசூர் மகாராஜா என்ன ....
எத்தனை மன்னர்கள் அவரைத் தரிசிக்க காத்திருப்பார்கள்..!"

பரமசிவேந்திராவின் மனமறிந்து 
சாஸ்திரியார் வீசிய கத்தி
பதம் பார்க்க ஆரம்பித்தது.

"இங்கே 
அழைத்ததாகச் சொல் "
குறைவாகவே சொன்னார். கோபம் நிறைந்திருந்தது..

காரணம்
சாஸ்திரியார் 
சுட்டிக்காட்டிய குறை நியாயமாகப்பட்டது குருநாதருக்கு.

மைசூர் திரும்பிய சாஸ்திரியார் 
மெத்த நடிப்போடு
"சுவாமி,.....
உங்களை குரு பார்க்க விரும்புவதாகச் 
சொல்லச் சொன்னார்"

குரு அழைப்பை ஏற்று 
குரு நினைவுகளோடு 
 பதவியை  ராஜினாமா 
செய்து விட்டுப் புறப்பட்டார் மைசூர் சமஸ்தான வித்வான் சதாசிவம்.

ஒளியின் வேகத்தை விட வேகமாக மடம் விரைந்து குருநாதர் தாளடி பணிந்தார் சிஷ்யகோடி.

குரு ஏதும் பேசவில்லை.
கண்ணீரோடு குருவின் முகமும் பாதமும் பார்த்தார்.

"ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ ...
உன் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளவில்லையா ?" 

குரு
ஒரே வார்த்தையில்  'வாயடக்கு '
என்று
உபதேசம் அருளியதாக நினைத்தார் சீடர்.

அன்று 
பேசியது தான்
அவர் பேசிய
இறுதிப் பேச்சு.

பின் எப்போதும் 
பேசவே இல்லை.

குருவின் 
ஒரு சொல் 
சீடரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.

தாயின் வார்த்தையால் பசியைத் துறந்தவர்
குருவின் வார்த்தையால் பேச்சைத் துறந்தார்.

ஆம்......
'நாவடக்கு '
 மாதாவின் சொல்.
' வாயடக்கு '
குருவின் உபதேசம். 

'அடுத்து?' 
என்கிற மாதிரி 
குருவைப் பார்த்தார் 
மெளனம் கண்ட சதாசிவம்.

"விரும்பிய இடம் செல்.... தவம் செய்...."

'வீணே ஆடைகள் எதற்கு..?' என்று உடைகளுக்கும் விடைகொடுத்தார்.

திகம்பரராகவே அலைந்தார். நிர்வாணமாகவே திரிந்தார்.

மக்கள் 
நடமாட்டமில்லாத 
சம தரைப்பகுதி,
 மலைஉச்சி,
நதிக்கரை, 
அடர் வனம் 
அவர் 
வாசஸ்தலங்கள் ஆகின. 

இப்படித்தான் 
ஒரு முறை....

எங்கோ ஒரு திறந்தவெளியில் படுத்திருந்தார். 

தலைக்கு ஏதுவாக
மண் குவித்து 
தலை சாய்த்திருந்தார்.

அப்போது வந்த 
கிராமத்து மக்கள் 
"முற்றும் துறந்தவருக்கு தலையணைப் பாரு"
கேலி செய்தபடி சென்றுவிட்டனர்.

 'என்ன இது...
 வம்பா போச்சு..'
 என நினைத்தாரோ என்னவோ மறுநாள்
மணல் குவிக்காமல் 
தலை சாய்ந்து இருந்தார்.

அப்போதும் ஒரு 
விமர்சனம் வந்தது.

" நாம் நேற்று சொன்னதைக் கேட்டு சாமிக்கு கோபம் வந்துவிட்டது...பாரு..."

வேத சித்தாந்த 
யோக ஞானிக்கு 
அதிர்ச்சி.

குருவிடம் விளக்கம் கேட்டார் .

"அகந்தையை வீடு..." அற்புதமாய் சொன்னார்.

"பிறர் சொல்லுக்கு 
செவி கொடுக்காதே... கோபம் தவிர்..."
குருவிடம் கிடைத்தன உபதேச சொற்கள்.

அதன்பின் 
அவர் வாழ்வு முற்றிலும் குறை ஒன்றும் இல்லாமல்
இறை ஒட்டியே இருந்தது.

ஐந்து சிவயோகங்கள்
அனுபவித்தார்.. தன்னிகரில்லா 
திருமூலர் 
சொல்லிச் சென்ற யோகங்களில் 
கரை கண்டார்.

எல்லா சித்திகளும் கைகூடின.
தன்நிலை மறந்தது 
அதில் ஒன்று.

ஆகாயத்தில் பறந்தவர் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் பயணித்தார்.

மண்ணுக்குள் புதையுண்டு பல காலம் கிடந்தார். 

கரம் வெட்டப்பட்ட போதும், முள் செடிகளுக்கிடையில் நெடுதுயில் கொண்ட போதும் ரத்தம் பீறிட்டது உணராமல் கடந்தார்.

அவர் நிகழ்த்திய அற்புதங்கள் 
திட்டமிட்டவை அல்ல. 
சித்துகளை உலகுக்கு காட்டும் 
வீண் விளம்பரங்கள் அல்ல.

உடல் உணர்ச்சிகள் இன்றி வெட்கம், துக்கம், மகிழ்வு உள்ளிட்ட மன உணர்வுகள் ஏதுமின்றி 
ஏகாந்த நிலையிலேயே 
இருந்து வந்தார். 

அவர் பாட்டுக்கு அவர் இருந்தார். 
அதுதானே 
சித்தன் போக்கு ?

உணர்வு அற்ற நிலை என்பது  வெகு சில சித்தர்களுக்கே சாத்தியம்.

அவர்களில் முதன்மையானவர் 
சத்குரு 
சதாசிவ பிரம்மேந்திராள்.
 



Leave a Comment