‘கோலாஸுர பயங்கரீ...’ யான கோலாப்பூர் மகாலட்சுமி தாயார்


 

அகில உலகிற்கும் அன்னையாக விளங்கும் தேவி பராசக்தியை  நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்கை,லக்ஷ்மி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் வணங்குகிறோம்.அவர்களை நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பக்தி சிந்தனையுடன்,முழுமனதோடு வழிபட்டால்,நாம் கேட்டதையும்,கேட்காத பலவற்றையும் பெறலாம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும்,அடுத்த மூன்று நாட்கள் மஹா லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியன.

இன்றைய பதிவில் உலகத்தை காக்கும் ஜகத்ரட்சகனான அந்த மகாவிஷ்ணுவின் திரு மார்பில் உறையும் லட்சுமி தேவியின் சிறப்பு பெற்ற தலங்களுள் ஒன்றான கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

                  

நவராத்திரி கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று, மஹாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்புரி. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும், நவராத்திரி திருவிழாவே இந்த ஆலயத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.இன்று வரைக்கும் நவராத்திரிக்கு கோலாப்பூர் மகாலட்சுமியை அலங்கரிக்க திருப்பதி திருத்தலத்திலிருந்து பெருமாளின் பரிசாக பட்டுப்புடவைகள் வந்து சேர்வது சிறப்பு.

 

கோலாப்பூர் என்றதுமே நமக்கு ‘கோலாஸுர பயங்கரீ...’ என்ற மஹாலக்ஷ்மி அஷ்டகத்தில் வரும் வரிகள் தான் நினைவிற்கு வரும். ஆம் கோலாசுரன் என்ற அரக்கனை சிம்ம வாகினியாக வந்து தேவி மகாலட்சுமி அடக்கி அருளிய தலம் என்று ‘கர வீர மகாத்மியம்’ கூறுகிறது. பயங்கரி என்ற வார்த்தையில் தான் பயங்கரம் இருக்குமே தவிர அன்னையின் முகத்தில் இருக்காது. தவிர, தன்னை அணுகும் பக்தர்களுக்கு அவள் செல்வத்தை வாரிவாரி வழங்கும் தயாபரி.  தன்னை உள்ளன்போடு நாடி வரும் பக்தர்களுக்கு எப்போதுமே அவள் வரப்ரசாதி தான்.

இது மட்டுமின்றி சரஸ்வதி, சிவாநதி, கும்பி நதி, பாக்வதி, பத்ரா நதி என்ற ஐந்து புண்ணிய நதிகள், கூடும்“பஞ்சகங்கா’ என்ற தனிச் சிறப்பும் கோலாப்பூருக்கு உண்டு. இது சக்தி பீடங்களுள் ஒன்று.

 

                                                                                                                                                 

 

‘கர்வீர் நிவாஸிநி’ என்றும் ‘அம்பாபாய்’ என்றும் போற்றப்படும் கோலாப்பூர் ஸ்ரீதேவி மஹாலட்சுமி ஆலயம் கிட்டத்தட்ட 6000 ஆண்டு பழமையானது. இந்த ஆலயத்தில், 40 கிலோ எடையுள்ள, மிக உயர்ந்த ஒளி பொருந்திய கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட்டு சிலா ரூபத்தில் ஒரு சதுரமான கல்லின் மீது நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அருள் பாலிக்கிறாள். தேவியின் சிரத்தின் மேல் ஆதிசேஷன் குடையாக விளங்க, பின்னால் சிம்ம வாகனமும், நான்கு கரங்களும் கொண்டு தாமரையின் மேல் நிற்கிறாள்.

 

கோலாசுரன் என்ற கொடும் அரக்கனை மஹாலட்சுமி நவ துர்க்காக்களின் உதவியுடன், எதிர்த்து அழித்ததால்,இவ்வூர் கோலாப்பூர் எனப் பெயர் பெற்றது. நவராத்திரியின் ஒன்பது நாளூம் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் அம்மன் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சி.

 

ஒருமுறை அகத்தியர் தென்பகுதி யாத்திரை முடிந்து காசிக்குச் செல்லும் சமயம் களைப்பு ஏற்பட,ஈசன் அவருக்கு  காட்சியளித்து கோலாப்பூரை ‘தட்சிண காசி’யான கோலாப்பூரில் தங்கினாலே அது, உத்தர காசியில் வாழ்ந்ததற்குச் சமம் என்று அருள் புரிய அகத்தியரும், அவர் மனைவி லோபா முத்திரையும் இத்தலத்திலேயே வாழ்ந்ததாக புராண வரலாறு ஒன்று உண்டு.

 

இக்கோவிலின் சிறப்பே தாயாருக்கு செய்யப்படும் ஆரத்தி தான். தினமும் ஐந்து முறை ஆரத்தி நடத்தப்படும். நவராத்திரியின் முதல் நாள் கலச பூஜையுடன் ஆரம்பிக்கப் பட்டு ஒவ்வொரு நாளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி அன்று இரவு அம்மன் தூங்காமல் ஊர் முழுவதும் சுற்றி வருவதாக ஐதீகம். மறு நாள் விடியற் காலை ‘தேவி ஸப்தஸதி’ பாராயணத்துடன் ஹோமம் செய்யப்பட்டு பூரணாஹூதியுடன் நவராத்திரி உற்சவம் முடிவடைகிறது.

 

இந்தக் கோவிலின் இன்னுமோர் சிறப்பு,வருடத்தில் மூன்று நாட்கள் சூரியன் மஹாலட்சுமியை தனது ஒளி கதிர்களால் வழிபடுவது. திருமணம், புத்திரப் பேறு என தாயாரிடம் வேண்டுதலை வைப்பவர்கள், வேண்டுதல் பலித்தவுடன், அபிஷேகம் செய்து புடவை சாற்றுவது வழக்கம்.

 

இத்தகைய பெரும் சிறப்பு வாய்ந்த கோலாப்பூர் சென்று மஹாலட்சுமி தாயாரை வணங்கி சகல ஐஸ்வர்யங்கள் பெறுவோம்.

 



Leave a Comment