கணவரின் ஆயுள் நீடிக்க... சாவித்திரி விரதம் எனும் காரடையான் நோன்பு


காரடையான் நோன்பு.... இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இவ்விரதம் மேற்கொள்வதால் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிப்பதோடு அவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வினை அம்மன் வழங்குவதாக் கருதுகின்றனர்.

வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் இந்த விரதம் பின்பற்றப்படுகிறது.

இவ்விரத வழிபாட்டின் போது கார்காலத்தில் விளைந்த நெல்லினைக் கொண்டு அடை செய்து சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

இவ்வழிபாட்டில் கவுரி ஆகிய காமாட்சி அம்மனை வைத்து வழிபடுவதால் கவுரி விரதம், காமாட்சி விரதம் என்றும், சாவித்திரி வழிபட்டதால் சாவித்திரி விரதம் என்றும் இவ்விரத முறை அழைக்கப்படுகிறது.

இவ்விரத வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது. வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment