விநாயகர் ஏன் "முழுமுதல்" கடவுள் ?!


முதல் கடவுள் என்றால் முதலில் தோன்றிய அல்லது முதலில் வணங்க வேண்டிய கடவுள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு முழு முதல் கடவுள் என்று அழைக்க வேண்டும்?! இதில் தான் விநாயகர், ஆனைமுகத்தோன், பிள்ளையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் விண்ணின் நாயகனான தலைவனின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

இவரைக் காண நாம் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று வணங்க வேண்டியதில்லை. தெரு முனைகளில் மரத்தடியின் கீழ் கருணையுடன் நமக்காகக் காத்திருப்பார். குறிப்பாக அரச மரத்தடியின் கீழ் அமர்ந்திருப்பார். படிப்பு நல்லா வரனுமா? குழந்தை வரம் வேணுமா ? காரியத் தடைகள் உடையனுமா ?  108 குடம் தண்ணீர் எடுத்து விநாயகர் சிலைக்கு ஊற்று. அரச மரத்தை 108 சுத்து சுத்து முடியலைன்னா 3 சுத்தாவது சுத்து என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படித் தண்ணீர் குடம் குடமா அந்தக் கல் சிலை மேல ஊத்தி, மரத்தை சுத்தினா குழந்தை வரம் எப்படிக் கிடைக்கும் ? சுத்தப் பேத்தல், மூடநம்பிக்கைன்னு  நம்மில் பலர் நினைக்கக் கூடும். ஆனா, ஆறு அல்லது குளத்தில் இருந்து தண்ணீரைக் குடத்தில் எடுத்துக் கொண்டு நடந்து வந்து நடந்து வந்து விநாயகர் சிலை மீது ஊற்றுவது உடல் பயிற்சி. மூச்சு மேலும் கீழும் வாங்கும். கெஸ் வாங்குதுன்னு சொல்வாங்க இல்ல, அது போல இப்படி மூச்சை அதிக அளவில் நாம் நுரையீரலுக்குள் செலுத்துகிறோம். அதுவும் அரச மரத்தினடியில். அரச மரம் Oxygen எனும் (ஆக்சிஜன்) பிராணக் காற்றை அதிகம் வெளியிடக்கூடிய ஒரு மரம். இதனால் நாம் அதிக அளவில் ஆக்சிஜனை நம் உடலுக்குள் அனுப்புகிறோம்.

இதனால் மூளை தொடங்கி கால் பாதம் வரை தூய்மையான ஆக்சிஜன் சென்று சேரும். உடலும், உள்ளமும் உறுதியும், புத்துணர்வும் பெறும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் கல்வி கற்கத் தேவையான ஞாபக சக்தியைத் தரும். குழந்தை வரம் வேண்டுபவருக்கு மூச்சின் சுவாச முறைகளை ஒழுங்கு படுத்தி உடல் உள்ளத்தினை வளப்படுத்தும்.

உண்மையைக் கூறினால் மூச்சுப் பயிற்சியின் ஒரு அங்கம்தான் இந்த விநாயகர் - அரசமரம் - தண்ணீர் - சுற்றுதல் - வணங்குதல் எல்லாம். உணவு தண்ணீர் இல்லாம ஒரு குறிப்பிட்ட காலம் இருக்க முடியும். ஆனால் மூச்சு விடாம 5 நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்காது. உயிர் ஆட்டம் காட்டிடும். அதனால்தான் மூச்சு எனும் முழுமுதல் கடவுளாகிய விநாயகனை வணங்குகிறோம். வணங்கி நல்ல மூச்சு, நல்ல புத்தி, நல்ல உடல், மன நலம் கொடுன்னு வேண்டுறோம்.

விநாயகரை முதலில் வணங்கித்தான் பல சித்தர்களின் பாடல்களே தொடங்குகின்றன. ஒளவையாரின் விநாயகர் அகவல் வெறும் மூச்சுக் காற்றின் கடவுளைப் பற்றியது மட்டுமல்ல பேரண்டத்தின் பெரும் பொருளைப் பற்றிய இரகசியங்களை உணரும் ஒரு பெரிய ஃபார்மூலா அது.

விநாயகர்னா சும்மா இல்ல. ஒரு கட்டத்துக்குப் பிறகு உருவ வழிபாடே தேவையில்லைன்னு அறிவுறுத்திய இராமலிங்க வள்ளல் பெருமானார் தொடக்கத்தில் நிறைய பாடல்கள் விநாயகரைப் பற்றி எழுதியிருக்கார் தெரியுமா? அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் ஆனைமுகத்தோன்.

சித்தர் பெருமான் திருமூலர் எழுதிய பாடல்தான்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

எனும் பிரபலமான பாடல்.

இராமலிங்க வள்ளலார் பெருமானார்

அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை. என்றும்

உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.

என்றும் மெய்யியல், இறையியல், மெய்ஞானம் ததும்பும் பாடல்களை இயற்றியுள்ளார்.

விநாயகரை மறப்பது மூச்சுக் காற்றை மறப்பது போன்றது. மறவாமல் ஆனைமுகவனை வணங்கி வருவோம். ஏனெனில் இறைப் பெருநிலை அடைய அவர்தான் "முதல்" படி. முழு முதல் கடவுள்.

- வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்

 



Leave a Comment