பாவங்கள் அனைத்தும் விலக்கும் தைப்பூச விரத வழிபாடு....


எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது.

சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப் பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர். சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

 



Leave a Comment