திருமலையில் சாமியை தரிசிக்கும் முறை எது ?


திருமலையில் சாமியை தரிசிக்கும் முன், மிகவும் புனிதமான சுவாமி புஷ்கரணியில் முதலில் நீராட வேண்டும். அதற்கு முன்பு, சுவாமிக்கு செலுத்தவேண்டிய காணிக்கை இருந்தால் தலைமுடி காணிக்கையாக செலுத்தி, சுவாமி புஷ்கரணியில் புனித நீராடிய பிறகு, புஷ்கரணி தீரத்தில் இருக்கும் ஆதிவராஹ சுவாமியை தரிசிக்க வேண்டும்.

இந்த திருமலை ஷேத்திரத்திற்கு ஆதிவராஹ ஷேத்திரம் என்று பெயர்.ஷேத்திராதிபதியாக வராஹ சுவாமி இருப்பார். மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மூன்றாவதாக வரும் வராஹ அவதாரத்தின்போது, சுவாமி இரண்யாட்கன் என்ற அரக்கனிடமிருந்து பூதேவியை காப்பாற்றி கடலிலிருந்து உத்தரித்த பூவராஹ சுவாமியாக பூதேவியுடன் சுவாமி புஷ்கரணி தீரத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

திருவேங்கடமுடையான் வைகுண்டத்திலிருந்து அவதரித்து கலியுகாந்தம் பக்தர்களுக்காக இங்கு இருக்க விரும்பி,இது ஆதிவராஹ ஷேத்திரமாகையால், வராஹ சுவாமியிடம் இருக்க இடம் கேட்டு வந்ததாகவும், சுவாமி புஷ்கரணிக்கு தென்மேற்கு திசையில் வராஹ சுவாமி  மஹாவிஷ்ணுவிற்கு இடம் கொடுத்ததாகவும், இப்பொழுது சுவாமி எழுந்தருளியிருக்கும் இடம்தான் அது என்றும் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வராஹ சுவாமி மஹாவிஷ்ணுவிற்கு இடம் கொடுத்ததற்கு பதிலாக,வராஹ சுவாமிக்கு முதல் ஆராதனம்,முதல் நிவேதனம் முதல் தரிசனமும் மஹாவிஷ்ணு அளித்திருக்கிறார். ஆகையால் பக்தர்கள் சுவாமி புஷ்கரணியில் ஸ்நானமாடி,வராஹ சுவாமியை தரிசித்து, பிறகு, திருவேங்கடமுடையானை தரிசித்து, சுவாமியினுடைய மஹாபிரசாதத்தை சுவீகரித்து திரும்பி செல்ல வேண்டியதே சரியான யாத்ரா கிரமமாக சொல்லப்பட்டிருக்கிறது.

திருமலைக்கு வருகைதரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் இந்த யாத்ரா கிரமத்தை சரியாக அனுசரித்து முதலில் வராஹசுவாமியை தரிசித்தபிறகு திருவேங்கடமுடையானை தரிசித்து முழுபலனை பெறவேண்டும்.



Leave a Comment