காசி விசுவநாதர் ஆலயத்திற்கு வந்த சுவாமி ஐயப்பனின் வெள்ளி, தங்க திருஆபரணங்கள்....


கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் மார்கழி மஹோற்சவ விழா நாளை தொடங்குவதை முன்னிட்டு சுவாமி ஐயப்பனின் ஆபரணங்கள் மற்றும் மாயவாள் தமிழக கேரள காவல்துறையின்  பலத்த பாதுகாப்போடு தென்காசிக்கு கொண்டுவரப்பட்டது.

ஆண்டுதோறும் கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாத மஹோற்சவ விழா தமிழக கேரளா மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத மஹோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக சுவாமி ஐயப்பனின் வெள்ளி, தங்க திருஆபரணங்கள் கேரள மாநிலம் புனலூர் கிருஷ்ணா கோவிலில் அமைந்துள்ள அரசு கருவூலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.

முன்னதாக சுவாமி ஐயப்பன் ஆபரணங்கள் மற்றும் சுவாமி ஐயப்பன் பயன்படுத்திய மாய வாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆபரணங்களில் முக்கிய அம்சமாக சுவாமி அய்யப்பன் பயன்படுத்தியதாக கூறப்படுவதும், இடத்திற்கு இடம் எடை மாறும் தங்க மாயவாள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. இத்தனை சிறப்புமிக்க ஆபரணப்பெட்டி புனலூரில் இருந்து தமிழக கேரள காவல்துறை மற்றும் தமிழக திருஆபரண பெட்டி வரவேற்பு குழுவினர் பாதுகாப்போடு தென்மலை, ஆரியங்காவு மலைப்பாதை வழியாக வந்து, தமிழகத்தில் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்திற்கு வந்தடைந்தது. அங்கு சுவாமி ஐயப்பனின் திரு ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் திரு ஆபரண பெட்டியை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில்  தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலுக்கு சென்றடைந்தது. அதனை தொடர்ந்து நாளை காலை மார்கழி மாத மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 4 நாட்கள் உற்சவ பலி நடைபெறுகிறது. 7 மற்றும் 8-ஆம் திருநாள் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டம் கல்பாத்திக்கு அடுத்தபடியாக ரத உற்சவம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் 9-ஆம் திருநாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. 10-ஆம் நாள் ஆராட்டு விழாவும், 11-ஆம் திருநாள் மண்டல பூஜையோடு விழா நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து சுவாமி ஐயப்பனின் திரு ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.



Leave a Comment