அரோகரா... அரோகரா... பக்தி முழக்கத்துடன் அண்ணாமலையார் கோவிலின் மகா தீபம் ஏற்றம்...


திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10ம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்  அனேகனாகவும் அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோயிலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் விநாயகர், முருகர், உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பல்வேறு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர்  சரியாக 5:59 மணியளவில்  ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்ந்தநாரீஸ்வரர்  பக்தர்களுக்கு  அருள் பாளித்தார். அப்போது கோவிலின் கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். இதனை தொடர்ந்து சரியாக மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது  அனேகன் ஏகனாக ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும்     விதமாக மகா தீபம் ஏற்றப்பட்டது.  


 
சுமார் 2668 அடி உயரமுள்ள  மலையின் மீது 5 அடி உயரம் கொண்ட கொப்பறையில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 4500 கிலோ நெய் நிரப்பட்டு 2500 மீட்டர் காடா துணியை  திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப தரிசனத்தை சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து லட்சக்காணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட  கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்தனர். இன்று ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எறியும். 11 நாட்களுக்கு பிறகு மலை மீது இருந்து கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு இறக்கப்பட்டு கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மை தயாரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் தீப மைய்யினை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த தீபத் திருவிழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் முக்கிய செய்திகள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment