சிக்கல்களையெல்லாம் தீர்த்து வைக்கும் சிங்கார வேலன்!


நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்துள்ளது சிக்கல் எனும் சின்னஞ்சிறிய கிராமம். ஆனால், முருகப் பெருமானின் கருணையாலும் அருளாலும் இந்த ஊர், உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலமாகியிருக்கிறது. சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கி விடும்.

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உண்டு என்கிறது புராணம். பழநி,திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, வயலூர், விராலிமலை என்று இன்னும் பல தலங்கள் பிரசித்தி பெற்று திகழ்கின்றன. அதேபோல் எண்கண், எட்டுக்குடி, வடபழநி முதலான ஆலயங்கள் சக்தியும் சாந்நித்தியமும் கோலோச்சுகின்றன.

இந்தத் தலத்து சிவனாரின் திருநாமம் - நவநீதேஸ்வரர். அம்பாளின் திருநாமம் வேல்நெடுங்கண்ணி. அம்மையும் அப்பனுமாக இருந்தாலும் மைந்தன் தான் இங்கே நாயகன் . முருகப்பெருமானின் திருநாமம் - ஸ்ரீசிங்காரவேலர். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது .

சிவனாரின் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவே, முருகக்கடவுளின் சந்நிதி அமைந்திருக்கிறது. சோமாஸ் கந்தர் அமைப்பில் இருக்கும் இந்தத் தலத்துக்கு வந்தாலே நம் வினைகள் எல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.

கந்தசஷ்டியின் போது, இங்கே வேல் வாங்கும் திருக்கோல வைபவம் விமரிசையாக நடைபெறும். உமையவள் முருகப்பெருமானுக்கு வேல் கொடுக்கும் நிகழ்ச்சியும் வேல் வாங்கிக் கொண்டு முருகப்பெருமான் புறப்பாடு நிகழ்வதும் காணக் கண்கொள்ளாக் காட்சி.

ஐம்பொன் முருகன். அந்த தருணத்தில், முருகப்பெருமானின் திருமேனியில் இருந்து வியர்வை வழிந்துகொண்டிருக்கும். அதைத் துடைத்துக் கொண்டே இருப்பார்கள். வியர்வை வழிவதும் அதைத் துடைப்பதுமாகவே இருக்கும். வேறு எந்தத் தலத்திலும் நடக்காத அற்புத அதிசய ஆச்சரிய நிகழ்வு எனச் சொல்லிச் சொல்லி சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். வாழ்வில் எத்தனை சிக்கல்கள் வந்தாலும் சிக்கல் சிங்காரவேலருக்கு வேண்டிக்கொள்ளுங்கள். நம் சிக்கல்களையெல்லாம் சீர்படுத்தி வாழச் செய்வார் சிங்காரவேலர்.

 



Leave a Comment