தெய்வங்கள் அவதரித்த ஆவணி மாதம்....


சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆவணி மாதம் ஆகும். இந்த மாத அதிதேவதை ஸ்ரீதரன் ஆகும். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான இடமாகும். நமக்கு வேண்டிய ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணி வரைக்கும் சூரிய ஹோரை இருக்கும்.

சாம வேதிகளுக்கு ஒரு மாதம் தள்ளி அஸ்த நட்சத்திரத்தில் உபாகர்மம் மேற்கொள்கின்றனர். அநேகமாக பிள்ளையார் சதுர்த்தியிலோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னேயோ அல்லது பின்னேயோ இருக்கும்.

திருவிளையாடல் நிகழ்வுகள்

ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல உற்சவம் மிகவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, வளையல் விற்ற லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கியது போன்ற திருவிளையாடல் நிகழ்வுகளை மக்கள் விழாக்களாகக் கொண்டாடுகின்றனர். சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதத்தில் அவதரித்தவர்களாக விநாயகர், கிருஷ்ணர், சுவாமி தேசிகன் குமாரர் வரதாச்சாரியார், குலச் சிறையார், குங்கிலிய கலய நாயனார், இளையான்குடி மாறனார் ஆகியோர் கருதப்படுகின்றனர்.

மகாபலிக்கு உகந்த நாள்

ஆவணி மாத திருவோண நட்சத்திரம் மகாபலி சக்கரவர்த்திக்கு உகந்த நாளாகக் கூறுகின்றனர். பகவான் வாமன அவதாரம் எடுத்தது இந்த நாள் ஆகும். திரு ஓணம் பண்டிகை இந்த நாளில்தான். மகாபலி சக்கரவர்த்திக்காக வீட்டின் வாசலில் அத்தப் பூக்கோலம் போட்டு புத்தாடை உடுத்தி பல விதமான சுவையான பதார்த்தங்கள் செய்து உறவினர்களுடன் கலந்து மகிழ்ந்து உண்டு பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.

பகவான் கிருஷ்ணன், இந்த ஆவணி மாதத்தில் அஷ்டமி நட்சத்திரத்தில் பூமியில் அவதரித்தார். இந்த நாளை நாம் கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம்.  பகவான் கண்ணன் அஷ்டமியில் பிறந்து அந்த நட்சத்திரத்துக்கு ஒரு ஏற்றம் தந்துள்ளார். கண்ணனை மனதார வேண்டி வாழ்வில் எல்லா வளங்களையும் மக்கள் அடைகின்றனர். பகவான் கண்ணணாகிய தரனை, பக்தி மார்க்கமாக தியானம் செய்தால் நமது வினைகள் அனைத்தும் மாண்டுவிடும் என்கிறார் நம்மாழ்வார்.

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில்தான் விநாயகர் அவதரித்தார். இந்த நாளில்தான் விநாயகர் சதுர்த்தி தினம் மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தியென வழிபடுகின்றனர். இந்நாளில் விநாயகரை வணங்கி, சந்திர தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் பொடிப்பொடியாகி விடுவதாக பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆவணி மாதத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. பகவான் விஷ்ணு பாதாள லோகத்தில் இருந்த குதிரை முகம் கொண்ட அசுரர்களிடமிருந்து வேதங்களைக் காப்பதற்காக தானும் குதிரை முகம் வடிவெடுத்து அவர்களை வென்று வேதங்களைக் காத்தார். 

பகவான் குதிரை முகம் வடிவெடுத்ததால் இவரை ஹயக்ரீவர் என்ற திருநாமத்தால் பக்தர்கள் வழிபட்டனர். இவரை வழிபட்டால் கல்வியில் மேன்மை ஏற்படுகிறது. திருவஹிந்திரபுரம், செட்டி புண்ணியம் போன்ற தலங்களில் இந்த ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.



Leave a Comment