சிவமே மூச்சாக வாழ்ந்த காரைக்கால் அம்மையார்


சிவமே மூச்சாக வாழ்ந்த நாயன்மார்களில் முதன்மையானவரான  காரைக்கால் அம்மையார், மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். இவர் புனிதவதி என்ற இயற்பெயர் கொண்டவர்.

சோழமண்டலத்தில் அமைந்த காரைக்காலில் வைசியர் குலத்திலே, தனதத்தன் என்பவரின் மகளாக பிறந்த  புனிதவதியார் , சிறுவயது முதல் சிவபக்தியில் தன்னை கரைத்துக் கொண்டார்.

பருவமடைந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து ,நாகப்பட்டணத்தில், நிதிபதி என்பவருடைய மகனான பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தார் தனதத்தன். பரமதத்தனும், புனிதவதி அம்மையாரும் சிறப்புற இல்லறம் நடத்தி வந்தனர்.

ஒருநாள் பரமதத்தனிடம் வணிகம் செய்ய வந்த  சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கள் கொடுக்க , அவன் அவைகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான்.

சிவனடியார் ஒருவர்  உணவு நேரத்தில் புனிதவதியார் வீட்டிற்கு சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு,அமுது படைத்து அச்சிவனடியாருக்கு கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை படைத்தார்.உணவு உண்டு ,அம்மையாரை வாழ்த்திச் சென்றார் அவ்வடியார்.

பின், பரமதத்தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ணும் பொழுது,அம்மையார்  எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருப்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான்.

இன்னொரு மாங்கனியை சிவனடியாருக்கு படைத்துவிட்ட நிலையில், புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், ஒரு மாங்கனி அவர் கையில் விழுந்தது. அதைக் கொண்டுவந்து, கணவனுக்குப்  படைக்க,அவன் அதை உண்டு, "இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்" என்றான்.

புனிதவதியார் அதைக்கேட்டு, கணவனிடம் உண்மையை மறைப்பது அறம் ஆகாது என்று எண்ணி,"நீர் தந்த கனிகளில் ஒன்றை சிவனடியார் ஒருவருக்கு கொடுத்து விட்டமையால், , பரமசிவனைத் தியானித்து,அவருடைய திருவருளினால் இந்தக் கனி கிடைத்தது" என்றார்.

இதை பரமதத்தன்  நம்பாததினால் அம்மையார் பரமசிவனைத் துதிக்க , ஈசன் திருவருளினாலே ஒரு மாங்கனி அவர் கையில் வந்து விழுந்தது.இதனால் அவன் மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று அவரை விட்டு நீங்கினான். 

பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒரு வைசியனுடைய மகளை திருமணம் செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான்.

தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியார், உறவினர்கள் மூலம் இந்த தகவலைத் தெரிந்துக் கொண்டார். கணவனுடன் வாழ முடியாத தனக்கு இனி இளமையும் அழகும் வேண்டாம் என்றும் ,ஈசனைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை தந்தருளல்வேண்டும் என்றும் இறைவனை  பிரார்த்தித்தார்.

 அந்தக்கணமே  அக்கடவுளுடைய திருவருளினாலே, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

 ஈசன் அருளால் பேய் வடிவை பெற்ற புனிதவதியார், ஈசனை நினைத்து ஆலயம் பல சென்று பாடல் பாடி துதித்தார். புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போக விரும்பினார்.

திருக்கைலாசகிரியை அடைந்த அவர் , அங்கே காலினால் நடத்தல் கூடாது என்று எண்ணி , தலையினாலே கைகள் கொண்டு நடந்துபோய், மலையிலேறினார். புனிதவதியாருடைய பக்தியைக் கண்டு உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தார். நந்தி தேவரும்  புனிதவதியாரின் சிவ பக்தி கண்டு வியந்து வணங்கி வரவேற்றார்.

புனிதவதியாரைக் கண்ட சிவ பெருமான் ,அவரை நோக்கி, "அம்மையே வருக" என்று அழைத்தார். புனிதவதியாரும்  "அப்பா" என்று சொல்லிக் கொண்டு பரமேஸ்வரன் திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு என்ன வரம் வேண்டும் " என்று கேட்டார்.

புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்ற வரம் கேட்டார்.

சுவாமி அவரை நோக்கித் "தென் திசையில் உள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். காரைக்கால் அம்மையார் ,சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

திருச்சிற்றம்பலம் .....
 



Leave a Comment