திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரைவில் இலவச தரிசன டோக்கன்


திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது, கோடைக்காலத்திற்குப் பின் துவங்கும், என்று தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். இலவச தரிசன டோக்கன்களை பெற முறையான வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு, கோடை காலத்திற்குப் பின் வழங்கப்படும். ஆகஸ்டு 7 ஆம் தேதி முதல் ஆந்திரா முழுதும் தேவஸ்தானம் சார்பில் இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளன. மே மாதத்தில், இதுவரை இல்லாத வகையில், உண்டியல் வருவாய் 130.29 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

மேலும், இந்த மாதத்தில் ஏழுமலையானை 22.62 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்; ஒரு கோடியே 86 லட்சம் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது; 10.72 லட்சம் பக்தர்கள் தங்கள் தலைமுடியை பக்தர்களுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் இரவு சென்னையைச் சேர்ந்த பக்தை சரோஜா சூரியநாராயணன், 4.150 கிலோ எடையில் 2.45 கோடி ரூபாய் மதிப்பில் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க பூணுால் மற்றும் காசுமாலையை நன்கொடையாக வழங்கினார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Leave a Comment