திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சேவை கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை - அதிகாரிகள் விளக்கம் 


திருப்பதியில் ஆர்ஜித சேவை உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யவில்லை என்று தேவஸ்தான அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர். 

திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் அதிக அளவில் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும் நோக்கத்தில் சிபாரிசு கடிதத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

இதனை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக சேவை டிக்கெட்டுகள் விலை உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். அறங்காவலர் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தேவஸ்தான தொலைக்காட்சி மூலம் நேரலை செய்யப்படுகிறது.

கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்படும் சேவை டிக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை என்பதை தொடக்கத்திலேயே தெரிவித்துள்ளோம்.

கடந்த 2 ஆண்டுகளில் ஏழுமலையான் கோவில் கட்டுமான அறக்கட்டளை திட்டத்தின் மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 502 கோவில்கள் முதல் தவணையாக எஸ்.சி, எஸ்.டி மற்றும் மீனவர்கள் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது.

2-வது தவணையாக சுமார் 1100 கோவில்களின் கட்டுமானம் மேம்பாட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்ட பூமிபூஜை செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வர், சென்னை, உளுந்தூர்பேட்டை, சீதம்பேட்டா, அமராவதி, ரம்ப சோடவரம் ஆகிய இடங்களில் கோவில்கள் கட்டும் பணி பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Leave a Comment