மண்டலபூஜைக்காக  சபரிமலை ஐயப்பன் கோவில்  இன்று திறப்பு.....


கார்த்திகை மாத பிறப்பு மண்டலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மண்டலபூஜை சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மாலை புதிய மேல் சாந்திகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். 16ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை செல்லும் பக்தர்கள் இம்முறை பம்பை ஆற்றில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் காலை முதல் பகல் 12 மணி வரை சாமிக்கு நெய்யபிஷேகம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லிலேயே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் புத்தாண்டு தரிசனத்துக்கான முன்பதிவு நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 லட்சம் பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். 

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நாட்களில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விதிகளை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும் முன்பதிவு செய்தவர்கள் வராமல் இருக்கும் நாட்களில், சபரிமலை சென்று உடனடியாக முன் பதிவு செய்தும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உடனடி முன்பதிவு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் உடனடி முன் பதிவுக்கு பாஸ்போர்ட் நகல் மட்டும் கொடுத்தால் போதும். மற்றவர்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் கொடுக்க வேண்டும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போட்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். 
 



Leave a Comment