திருப்பதியில் நாளை முதல் இவர்களுக்கு மட்டும் இலவச தரிசனம்....


ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பல்வேறு முறைகள் இருக்கின்றன. இதில் சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கொரோனா இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

அதேசமயம் 300 ரூபாய் சிறப்பு கட்டண நுழைவு தரிசனம் மட்டும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதனுடன் கல்யாண உற்சவ டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. இந்த டிக்கெட்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிபாரிசு கடிதங்கள் மூலம் விஐபி தரிசனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் அனுமதிகப்படா விட்டாலும், ரூ.1,000 கட்டணம் செலுத்தி நடப்பாண்டிற்குள் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.300 கட்டண தரிசன வரிசையில் சென்று தரிசித்து கொள்ளலாம். பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூர் பயணங்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

திருப்பதியில் இலவச தரிசனத்தை நிறுத்தி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க தேவதானம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி நாளை முதல் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2000 பேருக்கும் மட்டும் முதல் கட்டமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தரிசனம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



Leave a Comment