ஜெனன ஜாதகத்தில் எந்த இடத்தில் மந்தனின் மைந்தன் மாந்தி இருந்தால் என்ன பயன்....?


முதலாம் வீட்டில் மாந்தி இருந்தால் மற்றவர்களை மதிக்கமாட்டார்கள், வீட்டில் தெய்வ சக்தி குடியிருக்காது, முரடர்கள், நல்ல எண்ணம் இருக்காது, மனக்கவலை இருக்கும், வீண் வம்பு வழக்குகள், உடலில் பாதிப்பு ஏற்படுத்தும்.  

இரண்டாம் இடத்தில் மாந்தி இருப்பவருக்கு குடும்பத்தில் நிம்மதி ஒற்றுமை இருக்காது, வாக்கு தவறும், பேச்சு தெளிவாக இருக்காது, ஆரம்பத்திலே கல்வி தடைபெறும், பணம் வரும் ஆனால் நிலைக்காது. 

மூன்றில் மற்றும் நான்கில் மாந்தி இருந்தால் என்னவாகும் என்று பார்ப்போம்.
கூறப்பா குளிகனுமே மூன்றில் நிற்க
கொற்றவனே துணைவனுடன் போரும்செய்வன்
வீரப்பா விரதனடா வாய்ச்சமர்த்தன்
விளம்புகிறேன் நாலினுட விவரங்கேளு
பாரப்பா பதி கடந்து கிரியில் வாசம்
பாலனவன் சிலகாலம் வாழ்ந்திருந்து
கூறப்பா போகருட கடாக்ஷத்தாலே 
குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே!

இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்றவன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச்சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக। மேலும் நான் கூறுவதைக் கேட்பாயாக.

குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேறிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பான். அதனால் குற்றமொன்றுமில்லை என்று போக முனிவரின் பேரருட் கருணை கொண்டு புலிப்பாணி கூறினேன். இதை நன்கு ஆராய்ந்து கூறுக என்பது இப்பாடல். முக்கியமாக நான்கில் மாந்தி இருந்தால் வீடு இருந்தாலும் அனுபவிக்க முடியாத மனை தோஷம் ஏற்படும்.

ஐந்தாம் இடத்தில் மாந்தி இருந்தால் புத்திர தோஷம், பிரேத சாபம் ஏற்படும். புத்திரரால் குடும்பத்திற்குப் பாதிப்பு ஏற்படும், மிகச் சிறந்த வீரனாகத் திடமாக; வெகுதன தான்ய சம்பத்துடைவன் வாழ்பவன், 

ஆறில் மாந்தி இருந்தால் துணிச்சலானவர்கள், அந்த ஜாதகரைப் பார்த்தால் எதிரிகள் பயப்படுவார்கள், தீராத கடன் உண்டாகும், பரோபகாரி, புகழுடன் இருப்பார்கள், ஆயுள் உண்டு, மந்திரங்கள் ஜெபிப்பவன் (எந்தமாதிரி மந்திர ஜபம் என்பது நல்லதா கெட்டதா என்று ஆராயவேண்டும்.)

ஏழாம் இடத்தில் மாந்தி இருந்தால் திருமணம் தள்ளிப்போகும் அல்லது தடை ஏற்படும், கணவன் – மனைவி உறவு பாதிப்படையும், கூட்டு தொழிலில் நஷ்டம் ஏற்படும், வயிற்றுக்குக் கீழ் பாதிப்பு ஏற்படும். 

ஜாதகர் எதற்கெடுத்தாலும் வீழ்ந்து வருவார்கள் இது மாந்தி 8ம் இடம் இருந்து பாதிப்பு கொடுப்பார். சிலருக்கு நீரால் கண்டம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் அதாவது ஒன்பதில் மாந்தி நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன், கண் நிறை தனம் பெற்று மகிழ்வான். தந்தையால் எந்த பயனும் இல்லாத குழந்தை தந்தையால் பாதிப்பு அல்லது தந்தையின் அரவணைப்பு இல்லாமை அல்லது தந்தை இல்லாத நிலை ஏற்படும். தந்தை வழி பூர்வீகச் சொத்து இழுபறியாக இருக்கும். கடந்த ஜென்ம பாவகணக்குகளை இந்த ஜென்மத்தில் தோஷங்களை உண்டாக்கும்.

பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் மாந்தி நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். ஜாதகன் பலவிதமாக யோசிக்க கூடியவன், விசித்திரமானவன், கஞ்சன், கடவுள் மீது பிரியம் கொண்டவர்கள், ஆகமொத்தம் குடும்பத்தில் சந்தோஷம் கூடி இருக்கும்.  

ஜாதகத்தில் 11,12-ல் மாந்தி இருந்தால் என்னவாகும் என்று புலிப்பாணி கூறும் பலன் பார்ப்போம்.

தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத்
தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன்
யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு
யென்மகனே வசியனடா ஜாலக்காரன்
வீணென்ற விரயனடா ரசவாதத்தால்
விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான்
கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே
கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே    
   
இப்பாடலில் 11ம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான், சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் தேவதை வசியன் (ஜாலக்காரன்). மாந்திக்கு 11ம் பாவம் நல்லது என்றும்.

பன்னிரண்டாம் இடத்தில் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன், ரசவாதம் தேர்ந்தவன், குடும்ப நாசம் செய்பவன், குருவான போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக. மாந்திக்கு 12ம் பாவம் கெட்டது என்றும், இதுதவிர ஜாதகன் 11ம் வீட்டில் பிறப்பவன் அரசனைப் போல வாழ்வான் மற்றும் சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சி, தலைமை பதவி அல்லது அரசு அதிகாரத்தில் இருப்பான், தொழில் மூலம் அதிக லாபம் ஈட்டுவான்
 



Leave a Comment