புது வீடு கட்டுவதில் தடையா? தோஷம் விலக்கும் கோ பூஜை


அமாவாசையன்று பருத்திக் கொட்டைப் பாலில் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுப்பது மிகுந்த புண்ணியம். எந்தக் கிரகம் நமக்கு தீங்கு செய்கின்றதோ, அதற்குரிய கிழமையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பசுவிற்கு கொடுத்தால் கிரகப் பாதிப்புகள் அகல வழிபிறக்கும்.  

நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் வாழைப்பழத்தைக் கீறி, அதன்மேல் வெல்லம் வைத்து பசுவிற்கு கொடுத்து வந்தால் பிதுர் தோஷம், சாப - பாவ தோஷங்கள் போன்றவை விலகி, குலம் தழைக்கும். கொஞ்சி மகிழும் குழந்தை இல்லத்தில் தவழ வேண்டுமானால் தவறாமல் கோபூஜை வழிபாட்டை மேற்கொள்வதோடு, பசுவிற்கு இயன்ற அளவு உணவோ, பழமோ கொடுத்து வர வேண்டும்.  

மேலும் பாதியில் கட்டிடப்பணிகள் நின்றாலோ, கட்டிடம் கட்டுவதில் தடைகள் வந்தாலோ அந்த இடத்தில் கோமியத்தைதெளித்து பசுவையும் அந்த இடத்தைச் சுற்றிவரச் செய்தால் இல்லம் கட்டுவதில் இருந்த தடை அகலும். இதை அனுபவத்தில் தான் உணர முடியும். வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முன் கண்டிப்பாக கோபூஜை செய்ய வேண்டும். 

அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, கண்டகச் சனி போன்ற சனி ஆதிக்கங்கள் உள்ளவர்கள் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை கொடுப்பது நல்லது. பொதுவாக ஒவ்வொருவரும் இல்லத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோமியம் தெளித்தால் கண்திருஷ்டி மற்றும் மனக்குழப்பங்கள் மாறி மகிழ்வான வாழ்க்கையும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். பசுவுடன், கன்றையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.  

இல்லத்துப் பூஜையறையில் பசுவும் கன்றும் இணைந்த கண்ணன் படத்தைவைத்து வழிபடுவதன் மூலம் பிள்ளைச் செல்வம் உருவாக வழிபிறக்கும். பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும். பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும்.  மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
 



Leave a Comment