திருப்பதி லட்டு விலை உயருமா?


ஜி.எஸ்.டி வரி விதிப்பால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும். இதனால், திருப்பதியிலுள்ள தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Comment