வாழ்வில் அதிர்ஷ்டங்கள் விலகாமல் இருக்க வைக்கும் 13 முகருத்ராட்சம் 


சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி! தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால் என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளையாடுகிறாயா? ஏழரை ஆண்டு அல்ல!ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை நெருங்க முடியாது என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். 

சிறிது நேரம் கடந்ததும் சுயரூபம் காட்டிய சிவன், சனீஸ்வரா! தோற்றுப் போனாயா? என்றார். ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித்தார் சனீஸ்வரர். யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலைநாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத்ராட்சம் அணிந்து சிவநாமம் ஜெபிப்போருக்கு சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப்பட்டார்.

11 முக ருத்ராட்சம் பகவான் அனுமானைக் குறிக்கும். விபத்தில்லா மரணத்தை உண்டாக்கும் இந்த ருத்ராட்சம் தியானம் செய்ய விரும்பும் ஆன்மிக ஈடுபாடு உடையவர்களுக்கு உகந்தது. யோக, ஆன்மிக, தியான வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 

குறிப்பாக இதை அணிந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலனையும், ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் இது தருவதாக கூறப்படுகிறது. ஏகாதசி ருத்திரர்களின் அம்சமாக இது விளங்குவதால் மறுபிறவி இல்லாத நிலையை அடைய விரும்புவர்களுக்கேற்ற ருத்ராட்சம் இது. 

இவற்றைத் தலைப்பகுதியில் அணிவது சிறந்தது. மோட்சத்தைத் தரக்கூடிய இந்த 11 முக ருத்ராட்சத்துக்குரிய மந்திரம் –ஓம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ…

12 முக ருத்ரட்சம் சூரியனின் அம்சமாக கருதப்படுகிறது.  இந்த ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் செல்வமும், ஞானமும் பெருகும் என்பது ஐதிகம். இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டது. 

இதை அணிபவர்கள் சூரியனின் பிரகாசம் போல் வாழ்க்கையில் வறுமையின் பிடியை உணரமாட்டார்கள். பிற உயிர்களைக் கொன்ற  பாவங்களைப் போக்கும் இந்த 11 முக ருத்ராட்சத்துக்குரிய மந்திரம் – சூர்யாய நமஹ.. ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ… 

13 முகருத்ராட்சம் ருத்ர என்று அழைக்கப்படுகிறது.விஸ்வதேவர்களுக்கு பிரியமானதாக இவை சொல்லப்படுகிறது. வாழ்வில் அதிர்ஷ்டங்கள் விலகாமல் இருக்க இந்த வகை ருத்ராட்சம் அணியப்படுகிறது. மேலும் 6 முக ருத்ராசத்துரிய பலன்களை இவை கொடுக்கும். இதற்கான மந்திரம் –ஓம் ஹரீம் நமஹ…

14 முக ருத்ராட்சம் தேவமணி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானைக் குறிக்கும். சீகாந்த ஸ்வரூபம் என்று சொல்லப்படும் 14 முக ருத்ராட்சம் அணிந்தவர்கள் தேவர்களும் வணங்கும் பெருமையைப் பெறுவார்கள். 

இதை நெற்றியைத் தொடுமாறு அணிய வேண்டும். இது விலைமதிப்புள்ளது. தெய்விக மணி என்றும் சொல்லலாம். இதை அணிந்தால் மனிதனின் ஐம்புலன்களிலிருந்து ஆறாவது புலனையும் விழிக்கச் செய்யும் என்பது ஐதிகம். இதை அணிபவர் எடுத்த முடிவுகளிலிருந்து வெற்றிகளை மட்டுமே பெறுவார். இதற்கான மந்திரம் –ஓம் நமஹ...

15 மற்றும் 16 முக ருத்ராட்சம் பொதுவாக மனிதர்கள் 1 முதல் 14 வரையிலான முகம் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே அணிய வேண்டும். 15 முக ருத்ராட்சமானது இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன்  போன்றோரின் இறைசக்திகளின் துணையோடு வாழலாம். 16 முக ருத்ராட்சம் சிவ சாயுஜ்ய என்று அழைக்கப்படுகிறது. 

அதாவது சிவ லோக பதவியைத் தருவதாக சொல்லப்படுகிறது.எனினும் 14,15,16 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் கிடைப்பது சற்றுகடினம் என்றே சொல்ல வேண்டும்.15 முதல் 21 வரையிலான முகம் உள்ள ருத்ராட்சம் மணிகளை பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும் என்று முனிவர்களும், ரிஷிகளும் கூறியிருக்கிறார்கள்.



Leave a Comment