திருப்பதியில் 10 நாட்களுக்கு வைகுண்ட துவாரம் வழியாக அனுமதி.....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு


வழக்கமாக இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வைகுண்ட துவாரம் வழியாக சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்யும் விதமாக 10 நாட்களுக்கு வைகுண்ட வாயிலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.


வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைணவத் திருத்தலங்களில் பரமபத வாயில் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், 7 ஆம் தேதி துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைகுந்த வாயில்  திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் மட்டுமே வைகுந்த வாசல் திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பல பக்தர்கள் இந்த தரிசனத்தை காண முடியாமல் போகிறது. எனவே அதிக பக்தர்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால் தீட்சிதர், ரமண தீட்சிதர், அனந்த சைன தீட்சிதர், சுந்தரவரத பட்டாச்சாரியா, ரங்காச்சாரி தீட்சிதர் ஆகிய 5 பேர் கொண்ட ஆகம ஆலோசகரின் ஆலோசனை கேட்கப்பட்டது. 

இந்த ஆலோசனையில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுந்த வாசல் திறக்கப்படுவது போன்று ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களுக்கு வகையில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்க ஆகம ஆலோசகர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் பாஞ்சராத்திர ஆகம முறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஏழுமலையான் கோவிலில் வைகானச ஆகமம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் ஆகம ஆலோசகர்கள் ஐவரும்  சேர்ந்து பத்து நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறந்து பக்தர்கள் அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பிறகு ஜனவரி 6ம் தேதி வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு 15ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில்  தரிசனம் செய்யும் வாய்ப்பை தேவஸ்தனம் ஏற்படுத்தித்தர திட்டமிட்டுள்ளனர். 

இரண்டு நாட்கள் மட்டும் வைகுண்ட வாயிலில்  பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யக் கூடிய நிலை இருந்த நிலையில் பத்து நாட்கள் வைகுந்த வாயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதன் மூலமாக சுமார் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



Leave a Comment