திருவாபாரணம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?


சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெற கூடிய முக்கியமான உற்ஸவம் மகர விளக்கு உத்ஸவம். ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையான ராஜசேகர பாண்டியன், வருடந்தோறும் மகர ஸங்கராந்தியன்று திருவாபரணங்களோடு வந்து ஐயப்பனைத் தரிசிப்பதாக வாக்களித்துள்ளார்.

பண்டைய காலத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே சபரிமலையின் நடைத்திறப்பு. வருடம் முழுதும் தவத்தில் இருக்கும் ஐயப்பன், திருவாபரணம் சார்த்தும் நேரத்தில் கண்திறந்து பக்தர்களைப் பார்க்கிறார் என்பதே ஐதீகம்.

வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தளம் அரண்மனையின் பொறுப்பில், பெட்டகத்தின் உள்ளே பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம், வருடத்தில் வெகு சில நாட்களுக்கு மட்டும்தான் வெளியே கொண்டு வரப்படுகிறது.

மகர விளக்கு உத்ஸவத்தின் 3 நாட்கள் முன்பு, பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக இன்றைய அரசர் உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். எத்தனை நேரம் ஆனாலும் எல்லோரும் வானை நோக்கிப் பார்த்தபடி காத்து இருப்பார்கள். கண்கூடாகக் காணும் அதியமாக வானில் கருடன் வந்து யாத்திரை துவங்க வட்டமிட்டு உத்தரவு தரும். திருவாபரணத்தை கருடன் வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும்.

ஐயப்பன் காலம் தொட்டு இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாக சில குடும்பங்கள் இருக்கின்றன. பரம்பரை பரம்பரையாக அவர்களே இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள். அவர்கள் எங்கெங்கு இருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் தங்கள் பாக்கியத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் வந்து சேர்ந்து விடுவார்கள்.

சுமார் மூன்று நாட்கள் காட்டுப் பாதையில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானைவட்டத்தை அடையும் போது உண்டாவது பரவசம். வட்டமிட்டுப் பறக்கும் க்ருஷ்ணப்பருந்து சாட்சியாய் உடன் வர, ஆட்டம் ஆடி துள்ளி துள்ளி மலைமேல் ஏறும் அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.

சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சந்நிதானம் அடைவதைக் கண்டாலே ஆனந்தம்.

ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தி காணக்கிடைக்கும் தரிசனம் - கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதானதொரு தரிசனம்.
 



Leave a Comment